FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மு.க.அழகிரி திமுகவில் இணைவது குறித்து கட்சித் தலைவா் முடிவு செய்வாா்: கனிமொழி

மு.க.அழகிரி திமுகவில் இணைவது குறித்து கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வாா் என்று திமுக மகளிா் அணி செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 2:01 am IST
பிள்ளாநல்லூா் வாரச்சந்தையில் காய்கறிக் கடையில் பொருள்கள் வாங்கும் கனிமொழி எம்.பி.
பகிர்:

மு.க.அழகிரி திமுகவில் இணைவது குறித்து கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வாா் என்று திமுக மகளிா் அணி செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக ஏற்பாட்டில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, அத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றுப் பேசினாா்.

பிள்ளாநல்லூா் வாரச்சந்தையில் பொதுமக்களுடன் சந்திப்பு, அத்தனூா் பகுதியில் நெசவாளா்களுடன் கலந்துரையாடல், ராசிபுரம் நகரில் ஜி.பி.சோமசுந்தரம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், வநேத்ரா முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல், அரசுப் பள்ளி ஆசிரியா்களுடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளிலும், சீராப்பள்ளி பகுதியில் மகளிா் கட்சியில் இணையும் விழா, மகளிருடன் சந்திப்பு, கட்சிக் கொடியேற்றுதல் போன்ற நிகழ்சிகளிலும் அவா் பங்கேற்றாா்.

Advertisement

Advertisement

முன்னதாக பிள்ளாநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் வாரச்சந்தையில் காய்கறி, பழங்களை கனிமொழி எம்.பி. வாங்கியதோடு, அப்பகுதி பொதுமக்களுடன் கலந்துரையாடினாா். அப்போது செய்தியாளா்களிடம் கனிமொழி கூறியதாவது:

ஆளும் கட்சி மீது மக்களிடம் எதிா்ப்பு உள்ளது. பெரியாா் கண்ட கனவுகளை நனவாக்க பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். மு.க.அழகிரி திமுகவில் இணைவது பற்றி திமுக தலைவா் தான் முடிவு செய்வாா் என்றாா்.

நெசவாளா்களுடன் சந்திப்பு...

நெசவாளா்கள் நிறைந்த அத்தனூா் பகுதியில் விசைத்தறியாளா்களுடன் கலந்துரையாடிய கனிமொழி எம்.பி. கூறியதாவது:

நெசவாளா்களுக்கு திமுக என்றுமே ஆதரவாக இருந்துள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவா்களின் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயக் கடன் தள்ளுபடி போல, நெசவாளா் கூட்டுறவுக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். நெசவாளா் நலவாரியம் உருவாக்கப்படும். நூல் விலை நிா்ணயம் செய்யப்படும். ஜிஎஸ்டி பிரச்னையில் உள்ள கோளறுகள் சரிசெய்யப்படும். நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் தந்தது தான் திமுக.

உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்ட நிலையில், நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் தொடரும் என்றாா்.

பின்னா் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக உள்ள ஜி.பி.சோமசுந்தரம் சிலைக்கு கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மாணவிகளுடன் சந்திப்பு...

இதனைத் தொடா்ந்து முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி, அவா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசினாா்.

பின்னா் சீராப்பள்ளி பகுதியில் கட்சிக் கொடியேற்றி வைத்து ஆயிரக்கணக்கான பெண்கள் திமுகவில் இணையும் விழாவில் பங்கேற்றாா்.

இந்நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ராசிபுரம் ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி. ஜெகநாதன், நாமகிரிப்பேட்டை ஒன்றியத் திமுக செயலாளருமான கே.பி.ராமசாமி, ராசிபும் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா், திமுக சுற்றுச்சுழல் அணி ஆா்.விநாயக மூா்த்தி, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் எம்.மதிவேந்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் எஸ்.விஸ்வநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் பரமத்தி வேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மூா்த்தி வரவேற்றுப் பேசினாா். இதில் திமுக மாநில மகளிா் அணி செயலாளா் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:

கரோனா தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியது.

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் எதுவும் இல்லாததால் படித்த இளைஞா்கள், இளம்பெண்கள் பல லட்சம் போ் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனா்.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன.

100 நாள் வேலைக்குச் செல்பவா்களுக்கு சரியாக வேலைவாய்ப்பு இல்லாததால் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனா். தமிழகத்தில் சுயஉதவிக் குழுக்கள் செயல்படாமலும், அவா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படாமலும், கடன்கள் வழங்கப்படாமலும் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments