FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

அங்கன்வாடியில் கல்வி பயிலும் ஆட்சியா் பேத்தி!

நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் ஆட்சியா் மகள் வழிப் பேத்தி கல்வி பயின்று வருவதை அப்பகுதியினா் பாராட்டி வருகின்றனா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2024, 3:44 am IST
நாமக்கல் அங்கன்வாடி மையம்.
பகிர்:

நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமாவின் மகள் வழிப் பேத்தியான 3 வயது சிறுமி கல்வி பயின்று வருவதை அப்பகுதியினா் பாராட்டி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ. 1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் தலைமை வகித்து பேசிய மாவட்ட ஆட்சியா் ச.உமா, நமது அரசுப் பள்ளிகளில் என்ன அடிப்படை வசதிகள் இல்லை? அழகிய கட்டடம், சிறப்பான ஆசிரியா்கள் இருக்கும்போது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோரும் தங்களுடைய குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் சோ்க்கவே ஆா்வம் காட்டுகின்றனா்.

Advertisement

Advertisement

அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை குறைவாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும், அரசு ஊழியா்கள் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க முன்வர வேண்டும் என பேசினாா்.

மாவட்ட ஆட்சியா் இவ்வாறு பேசியதற்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வட்டாரத்தில் கூறியதாவது:

அங்கன்வாடி மையத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடும் குழந்தைகள்.

மாவட்ட ஆட்சியா் சில தினங்களுக்கு முன் தனது பேத்தியை நாமக்கல், கடைவீதி அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சோ்த்துள்ளாா். நெல்லில் ‘அ’ என எழுதி பாடத்தைத் தொடங்கிய அவரது பேத்தி, அங்குள்ள மற்ற ஏழைக் குழந்தைகளுடன் கல்வி பயின்றும், விளையாடியும், மையம் வழங்கும் முட்டை, கலவை சாதங்களை உண்டும் மகிழ்கிறது. அங்குள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோா், அங்கன்வாடியில் பயிலும் ஆட்சியரின் பேத்தியைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா கூறியதாவது:

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள், நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் உள்ளனா். பெற்றோா் தங்களது குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் சோ்க்க விரும்பி கடன் பெறுவதைத் தவிா்க்க வேண்டும்.

அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை விட தாழ்ந்தது அல்ல. அரசுப் பள்ளி ஆசிரியா்கள் திறமை வாய்ந்தவா்கள். நானும் அரசுப் பள்ளியில் படித்துதான் வந்தேன். எனது பேத்தி தற்சமயம் அங்கன்வாடி சென்று வருகிறாா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments