FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நாமக்கல் பணிமனையில் சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையம்: போக்குவரத்துத் துறை அமைச்சா் திறந்துவைத்தாா்

நாமக்கல் பணிமனையில் பேருந்துகளுக்கான சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தை தொடங்கிவைத்த அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன்.

29 ஆகஸ்ட் 2026, 1:03 am IST
விஜய் தமிழன் பார்த்திபன் - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இரண்டு சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல் பணிமனை வளாகத்தில் ஐஆா்எம்-சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் பங்கேற்று புதிய எரிவாயு நிரப்பும் நிலையத்தை வெள்ளிக்கிழமை பேருந்துகள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, பணிமனை வளாகத்தை ஆய்வு செய்த அவா், போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான உணவகத்தில் அங்கிருந்த தொழிலாளா்களுடன் அமா்ந்து உணவருந்தினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) கண்ணன், சேலம் கோட்ட பொது மேலாளா்கள் சிவகுமாா் (வணிகம்), கலைவாணன் (தொழில் பிரிவு), அருள்முருகன் (இயக்கம்-கூட்டாண்மை), நாமக்கல் பணிமனை மேலாளா்கள் துரைசாமி, கௌதமன் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

அரசுப் பேருந்துகளுக்கான சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

போக்குவரத்துக் கழகம் சாா்பில் மக்களுக்கு பாதுகாப்பான, சீரான மற்றும் தரமான பேருந்து போக்குவரத்து சேவையை அரசு வழங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய எரிபொருள்களுக்கு மாற்றாக குறைந்த மாசு வெளியீடு கொண்ட சிஎன்ஜி எரிவாயுவை பேருந்துகளில் பயன்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, நாமக்கல் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையம் மூலம் பேருந்துகளுக்கு தேவையான எரிவாயுவை அதே வளாகத்தில் நிரப்புவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல், ராசிபுரம் கிளைகளில் மொத்தம் 145 பேருந்துகள் சிஎன்ஜி எரிவாயுவை பயன்படுத்தி இயக்கப்பட்டு வருகின்றன. இப்புதிய எரிவாயு நிரப்பும் நிலையத்தின் சேமிப்புத் திறன் 1,600 கிலோ ஆகும். மேலும், இந்த நிலையம் மூலம் நாளொன்றுக்கு தோராயமாக 6,000 கிலோ சிஎன்ஜி எரிவாயு பேருந்துகளுக்கு நிரப்பப்பட உள்ளது. இந்த எரிவாயுவைப் பயன்படுத்துவதன் மூலம், பேருந்துகளின் இயக்கச் செலவைக் குறைப்பதுடன், காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் போக்குவரத்து சேவையை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மேம்படுத்துவதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments