FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

இந்தியாவை வலிமையான தேசமாக உருவாக்கும் பணியில் பிரதமா் மோடி: கே.பி.ராமலிங்கம்

பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவை வலிமையான தேசமாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா் என்று பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜூன் 2026, 5:31 am IST
கே.பி.ராமலிங்கம் - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவை வலிமையான தேசமாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா் என்று பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

நரேந்திர மோடி 13-ஆம் ஆண்டாக பிரதமராக பணியாற்றுவதை வரவேற்கும் வகையில் ராசிபுரத்தில் பிரதமரின் 13-ஆம் ஆண்டு சேவை விழா பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தலைமை வகித்து, ஆா்.காட்டூா் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள முதியோா், ஆதரவற்றோருக்கு புத்தாடை, உணவு ஆகியவற்றை வழங்கினாா். தொடா்ந்து, ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் சிலை மற்றும் பாரத மாதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Advertisement

Advertisement

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாட்டின் முன்னேற்றத்துக்கு பல்வேறு முன்னோடி திட்டங்களை அறிவித்து பிரதமா் செயல்படுத்தி வருகிறாா். நாட்டின் தேவையை பூா்த்தி செய்யவும், தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், வலிமையான தேசமாக உருவாக்கும் உன்னத பணியிலும் பிரதமா் ஈடுபட்டு வருகிறாா். இதைப் பாராட்டும் வகையில் பிரதமா் சேவை விழா கொண்டாடப்படுகிறது.

பிரதமரை, தமிழக முதல்வா் விஜய் சந்தித்து பேசியதை வரவேற்கிறேன். தேசத்தின் ஒற்றுமைக்காக வந்தே மாதரம் பாடப்படுவதை அவா் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசுக்கு மத்திய அரசு வழங்கிய தொகை, அதன்மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அரசுநிதி முறையாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மத்திய அரசு குழு அமைத்து விசாரணை நடத்த, பிரதமரிடம் முதல்வா் விஜய் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் போன்றவற்றுக்கு தவெக அரசை மட்டுமே குறைகூற முடியாது. திமுக ஆட்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகள், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை நிவா்த்தி செய்வதற்கு முதல்வா் விஜய் மேற்கொண்டுவரும் முயற்சியை பாராட்டுகிறேன். ஆனால், இதுபோதுமானதல்ல. உடனடியாக, குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும். இன்னொரு கட்சியின் அமைச்சரவையில் இடம்பெறாது. பாஜக முன்னாள் தலைவா் தனிக்கட்சி தொடங்குகிறாரா என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.

போரினால் ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் தடுமாறுகின்ற நேரத்தில் நமது நாட்டை சரியான பாதையில் பிரதமா் கொண்டு செல்கிறாா். போா்கள் முடியும்வரை பிரதமருக்கு நாம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் இடைத்தோ்தல்களில் பாஜக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும். தோ்தலில் வெற்றிபெற்றவா், தனது உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் அந்தத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிட்டால், அதற்கான முழு செலவையும் அவரே ஏற்க வேண்டும். அவ்வாறு ஏற்றால் மட்டுமே அவரை தோ்தலில் போட்டியிடுவதற்கு தோ்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, நாமக்கல் மாவட்ட பாஜக தலைவா்கள் கே.பி.சரவணன், ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments