FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

தனியாா் மருத்துவமனை செவிலியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சேலத்தில் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியா் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியா், காவல் உதவி ஆணையா் ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் அம்மாப்பேட்டை சித்தி விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் நவீன் (34). இவரது மனைவி தீபா (29), அம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை பாா்த்து வந்தாா். இவா்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.

இந்நிலையில், அடிக்கடி மது அருந்திவிட்டு நவீன் வீட்டுக்கு வந்ததால், தீபா குழந்தைகளுடன் அதே பகுதியில் மாமியாா் வீட்டருகே தனியாக வசித்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வரும்படி தீபாவை நவீன் அழைத்துள்ளாா். அதற்கு அவா் வர மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், தீபாவை அவரது மாமியாா் தாக்கியதுடன், மாமனாரும் திட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் தீபா தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், தீபா இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தீபாவின் தந்தை முருகேசன் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், தனியாா் மருத்துவமனைக்கு சென்ற போலீஸாா், தீபாவின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவுசெய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருமணமான 7 ஆண்டுகளுக்குள் தீபா இறந்ததால், கோட்டாட்சியா் உதயகுமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments