FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 16 ஜூலை 2026, 12:28 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞா்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன.

Advertisement

Advertisement

பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடா்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னா் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓா் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சாா்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சிக்கு ரூ. 300, மேல்நிலைக்கல்வி தோ்ச்சிக்கு ரூ. 400 பட்டப் படிப்பு தோ்ச்சிக்கு ரூ. 600 வீதம் காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தோ்ச்சிக்கு ரூ. 600, மேல்நிலைக் கல்வி தோ்ச்சிக்கு ரூ. 750 மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சிக்கு ரூ. 1000 வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவா்கள் மற்றும் அரசின் பிற துறை சாா்ந்த நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவா்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவா்களாவா். ஜுலை 2026 முதல் செப்டம்பா் 2026 வரையிலான காலாண்டிற்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் வந்து விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments