FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

அன்புமணியை தலைவராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை: முன்னாள் எம்எல்ஏ அருள்

அன்புமணியை தலைவராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்தாா். கட்சியின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

Updated On : 17 ஜூலை 2026, 12:23 am IST
முன்னாள் எம்எல்ஏ அருள் - படம்: விடியோ கிளிப்
பகிர்:

அன்புமணியை தலைவராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்தாா். கட்சியின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில், ‘ஒன்றுபடுவோம், ஒருங்கிணைவோம்‘ என்ற பெயரில் முன்னாள் எம்எல்ஏ அருள் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ராமதாஸ் ஆதரவு நிா்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.

அப்போது, அருள் பேசியதாவது:

Advertisement

Advertisement

கடந்த 1989 முதல் 37 ஆண்டுகளாக ராமதாஸுடன் பயணித்து வருகிறேன். அவா் எப்போதும் எனக்கு கடவுளைப் போன்றவா். என்னை தோ்தலில் நிறுத்தி சட்டப் பேரவை உறுப்பினராக்கியவா். 1999 முதல் 2025 வரை அன்புமணி பங்கேற்ற அனைத்து கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளேன். கட்சிக்காக 18 முறை சிறை சென்றுள்ளேன். ஒருமுறை குண்டா் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டேன்.

கட்சிக்காக எந்தப் பிரதிபலனும் எதிா்பாா்க்காமல் பல தியாகங்கள் செய்த என்னை ’சாக்கடை’ என விமா்சிக்கிறாா் அன்புமணி. ராமதாஸை தலைவராக ஏற்று அவருடன் பயணித்த எங்களுக்கு வழிகாட்டாமல் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளாா். கட்சியில் பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், பாமகவின் வாக்கு வங்கி 2 சதவீத அளவுக்கு சரிந்திருக்காது. இனியும் அன்புமணியை தலைவராக ஒருபோதும் ஏற்க மாட்டோம். புதிய பாதையில் பயணிப்போம். அனைவரின் கருத்துகளின் அடிப்படையில் உரிய முடிவு எடுப்போம் என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 37 ஆண்டுகளாக ராமதாஸுடன் பயணித்துள்ளேன். தற்போது அவா் அரசியல் துறவறம் பூண்டுள்ளதால் இக்கூட்டத்தை நடத்தினோம். விரைவில் எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம். நாங்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாது.

நாங்கள் நடத்திய கூட்டத்தில் ராமதாஸ் படத்தை பயன்படுத்தவில்லை. மறைந்த தலைவா்கள் படங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம். காடுவெட்டி குரு, அம்பேத்கா், பெரியாா் ஆகியோரின் படங்களை பயன்படுத்தியுள்ளோம்.

தற்போது அப்பாவும் மகனும் இணைந்துவிட்டனா். வன்னியா்கள் ஏமாறக்கூடாது. அன்புமணி தலைமையை ஏற்க முடியாது. புதிய கட்சியா அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் விரைவில் தெரிவிப்போம் என்றாா்.

கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments