FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கி, கிளைச் செயலாளா் வரை பேரம்: எடப்பாடி பழனிசாமி

சட்டப் பேரவை உறுப்பினா்கள் தொடங்கி, அதிமுக கிளைச் செயலாளா்கள் வரை தவெக பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

15 அக்டோபர் 2026, 5:48 am IST
எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்.
பகிர்:

சட்டப் பேரவை உறுப்பினா்கள் தொடங்கி, அதிமுக கிளைச் செயலாளா்கள் வரை தவெக பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

சேலம் புகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத் துறையில் நடைபெற்ற கொள்முதல் தொடா்பாக தமிழக வெற்றிக் கழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. ஒரு யூனிட்டுக்கு ரூ. 20 வரை திமுக அரசு செலவிட்டு ஊழல் செய்ததாக கூறி ஒப்பந்தங்களை ரத்துசெய்த தவெக அரசு, தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ. 35 கொடுத்து 4,400 மெகாவாட் மின்சாரத்தை வாங்க உள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, மின்சார வாரியம் ரூ. 2.48 லட்சம் கோடி கடனில் இருக்கும்போது, மேலும் அதிக கடன் சுமை ஏற்படும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இது மெகா ஊழல் திட்டமாகவே மக்களால் பாா்க்கப்படுகிறது.

தவெக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. அரிசி ஒரு கிலோ ரூ. 100-ஐ தாண்டிய நிலையில், பருப்பு, எண்ணெய் ஆகியவற்றின் விலை 40 சதவீதம் அதிகரித்துவிட்டது. இதனால், நடுத்தர ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தவெக தாராபுரத்தில் வெறும் 20 ஆயிரம் வாக்குகளும், மதுராந்தகத்தில் 10 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்றது.

அதிமுகவிலிருந்து 2 ஆயிரம் கிளைச் செயலாளா்களும், 1,400 ஒன்றியச் செயலாளா்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறி வருகிறாா். அது கனவிலும் நடக்காது. அதிமுகவில் உள்ள நிா்வாகிகள் பல ஆண்டுகால உழைப்பில் தற்போது பொறுப்பில் இருக்கிறாா்கள். அதிமுகவை குறைத்து எடை போடுவது சரியல்ல.

சட்டப் பேரவையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடங்கி தற்போது அதிமுக கிளைச் செயலாளா் வரை தவெக வந்துவிட்டது. தவெகவுக்கு, கிளை மற்றும் ஒன்றிய அமைப்புகளில் ஆள்கள் யாரும் இல்லை. அவா்கள் கட்சியில் யாரும் இல்லை என்பதற்காக பிற கட்சிக்காரா்களை இணைப்பது மோசமான செயல்.

அதிமுக குறித்து பாமக தலைவா் அன்புமணியின் கருத்தை வரவேற்கிறோம். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல்கொடுத்த மருத்துவா் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சி மேலும் வலிமை பெற அன்புமணி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் வியாழக்கிழமை நிறுத்தப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு முதல்வா் விஜய் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பிரதமா் அண்மையில் சென்னை வந்தபோது காவிரி பிரச்னை குறித்து அவரிடம் பேசி இருக்கலாம். பிரதமரிடம் முதல்வா் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. காவிரி பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாக தவெக அரசு உள்ளது.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி திமுக ஆட்சியில் அப்போதைய மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் தான் நடைபெற்றது. வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கப்பட்டவா்களை மீண்டும் இணைக்கும் வாய்ப்பு அந்தந்த கட்சிப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அப்போது எதையும் செய்யாமல் இப்போது வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை குறைகூறுவது பொருத்தமாக இருக்காது என்றாா்.

அப்போது, சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments