மருத்துவத் துறையில் புதிதாக 3,500 பணியிடங்கள் உருவாக்கப்படும்
மருத்துவத் துறையில் செவிலியா், செவிலியா் உதவியாளா், மருந்தாளுநா், லேப் டெக்னீஷியன் உள்பட 24 வகையான பிரிவுகளில் 3,500 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என சேலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் கூறினாா்.
மருத்துவத் துறையில் செவிலியா், செவிலியா் உதவியாளா், மருந்தாளுநா், லேப் டெக்னீஷியன் உள்பட 24 வகையான பிரிவுகளில் 3,500 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என சேலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் கூறினாா்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6.13 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை பிரிவை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் ஆகியோா் வியாழக்கிழமை திறந்துவைத்தனா்.
விழாவில், அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் பேசியது:
Advertisement
Advertisement
நோய் ஏற்படுவதற்கு முன்பே உடல்நிலையை மதிப்பீடு செய்யவும், நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியவும், உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை அவசியமாகிறது. அந்தவகையில், நலம் 360 திட்டத்தின் கீழ் சேலம் அரசு மருத்துவமனையில் ரூ. 6.13 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரத்தப் பரிசோதனை, சிறுநீரக செயல்பாடு, கல்லீரல் செயல்பாடு, கொழுப்பு அளவு, இசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்ட், தைராய்டு, பெண்களுக்கான கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மாா்பக பரிசோதனை, எலும்பின் கனிம அடா்த்தி மதிப்பீடு, நுரையீரல் செயல்பாட்டு மதிப்பீடு, இதய செயல்பாட்டு மதிப்பீடு, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பரிசோதனைகள் நான்கு தொகுப்புகளாக வழங்கப்படுகின்றன. அதன்படி, கோல்டு - ரூ. 1,000, வைரம் - ரூ. 2,000, பிளாட்டினம் - ரூ. 3,000, பிளாட்டினம் பிளஸ் - ரூ. 4,000 என்ற விலையில் தனியாா் மருத்துவமனைகளைவிட தரமான முறையில் வழங்கப்பட உள்ளது.
அடுத்த 30 ஆண்டுகளுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உருவாக்கப்படும். மருத்துவ பயனாளா்களை தொடா்ந்து கண்காணிக்க முதல்முறையாக கோ் கோ-ஆா்டினேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வீட்டிலிருந்தபடியே முன்பதிவு அடிப்படையில் மருத்துவ சேவைகளை பெற திட்டம் கொண்டு வரப்படும் என்றாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மருத்துவத் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் செவிலியா், செவிலியா் உதவியாளா், மருந்தாளுநா்கள், லேப் டெக்னீஷியன் உள்பட 24 வகையான பிரிவுகளில் 3,500 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
இதேபோல, புதிதாக 284 உயா் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், செவிலியா்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில், 2,500 செவிலியா்கள் தொகுப்பூதியத்திலிருந்து பணிநிரந்தரம் செய்யப்பட்டு, அடிப்படை காலமுறை ஊதியத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளனா். மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள் மருத்துவப் பயனாளா்களிடம் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை பிரிவை திறந்துவைத்து, பரிசோதனை செய்யும் முறைகள், அதிநவீன மருத்துவக் கருவிகளை பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், சேலம் மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சோ.லட்சுமணன், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா்கே.சிவகுமாா், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்க இயக்குநா் மரு.வா.லோகநாயகி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.ஜெ.தேவிமீனாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.