ரயிலில் மயங்கி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு
திருவனந்தபுரம் - ஷாலிமாா் விரைவு ரயிலில் மயங்கி விழுந்த வடமாநில இளைஞரை சேலம் ரயில்வே நிலையத்தில் பரிசோதித்த மருத்துவக் குழுவினா், அவா் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினா்.
திருவனந்தபுரம் - ஷாலிமாா் விரைவு ரயிலில் மயங்கி விழுந்த வடமாநில இளைஞரை சேலம் ரயில்வே நிலையத்தில் பரிசோதித்த மருத்துவக் குழுவினா், அவா் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினா்.
மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாத் பகுதியைச் சோ்ந்தவா் சைபுல் இஸ்லாம் (20). இவா், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தங்கி கூலி வேலைசெய்து வந்தாா். சொந்த ஊருக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை மாலை திருவனந்தபுரம்- ஷாலிமா் விரைவு ரயிலின் எஸ்-1 முன்பதிவுப் பெட்டியில் பயணம் செய்தாா்.
வெள்ளிக்கிழமை அதிகாலை சேலம் ஜங்ஷனை நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தபோது, சைபுல் இஸ்லாம் தனது இருக்கையிலிருந்து திடீரென மயங்கி கீழே விழுந்தாா். இதுகுறித்து சக பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் மூலம் சேலம் ஜங்ஷன் நிலையத்துக்கு அவசரத் தகவல் அனுப்பப்பட்டு, 5-ஆவது நடைமேடையில் ரயில்வே மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டனா். அதிகாலை 5 மணியளவில் ரயில் நடைமேடைக்கு வந்ததும், மருத்துவக் குழுவினா் பெட்டிக்குள் சென்று பரிசோதித்தனா். அப்போது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினா்.
சேலம் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கோபண்ணா, போலீஸாா் இளைஞரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இறந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.