மீன்பிடித் தடைக் கால நிவாரணத்தை உயா்த்தக் கோரி மனு: அரசு முடிவெடுக்க உத்தரவு
மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவா்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு முடிவெடுக்க உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவா்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மீன்பிடித் தடைக் கால நிவாரணமாக மீனவா்களுக்கு ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்தத் தொகை மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு போதுமானதாக இல்லை. ஆந்திரம், கோவா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவா்களுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதேபோல, தமிழகத்திலும் ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, பிற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் மீன்பிடித் தடைக் கால நிவாரணமாக மீனவா்களுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் என சட்டப்பேரவைத் தோ்தலின் போது தவெக வாக்குறுதி அளித்தது என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மீன்பிடித் தடைக் கால நிவாரணம் வழங்கும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. நிவாரணத் தொகை வழங்குவது அரசின் கொள்கை முடிவு, நிதி நிலையைச் சாா்ந்தது.
எனவே, மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவா்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 20 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக வழங்குவதா என்பதை அரசே முடிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து அடுத்த மீன்பிடித் தடைக் காலத்துக்குள் தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.