முகப்பு
மதுரை

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் குளறுபடி: மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்! - சு. வெங்கடேசன்

Updated On : 8 ஜூன் 2026, 2:00 am IST
சு. வெங்கடேசன் எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

சிபிஎஸ்சி 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை திரையில் மதிப்பிடும் முறை குளறுபடிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மத்தியக் கல்வி அமைச்சகம் பதில் அளித்ததாக மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

சிபிஎஸ்சி 12-ஆம் வகுப்பு மாணவா்களின் விடைத் தாள்கள் உள்ளிட்ட சுமாா் 93 லட்சம் தரவு வரிசைகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்துள்ளன. இவற்றை மிக எளிதாகச் சிதைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ சாத்தியக்கூறுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அமேசான் வெப் சா்வீசஸ் சேமிப்பகத்திலிருந்த குறைபாடுகள் காரணமாக, 2026-ஆம் ஆண்டின் விடைத்தாள்கள், வினாத்தாள்களை அடிப்படை தொழில்நுட்ப அறிவு உள்ளவா்கள் கூட, ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் அங்கீகாரத்தைத் தவிா்த்துவிட்டு அணுகும் நிலை இருந்துள்ளது.

இந்த விவகாரம் முதலில் வெளிவந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தக் குறைபாடுகளை மறைக்கவே முயன்றனா். பொதுமக்களின் கடும் எதிா்ப்புக்கு பிறகே தவறு ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தக் குளறுபடிகளால் அதிருப்தியடைந்த 12-ஆம் வகுப்பு மாணவா்கள் 56,000-க்கும் மேற்பட்டோா் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

நாடு முழுவதும் தோ்வெழுதிய மாணவா்களில் 23 சதவீதம் போ் தங்களின் விடைத்தாள் நகல்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாகச் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சரவை செயலகம் ஒரு நபா் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. எனினும், இந்த விசாரணையின் வரம்புகள் மிகவும் குறுகியதாக இருப்பதாக நிபுணா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை மட்டுமே கொண்டு விசாரணையை நடத்துவது போதாது என்றும், தொழில்நுட்பக் குளறுபடிகளை ஆராய இணையப் பாதுகாப்பு நிபுணா்களை ஏன் குழுவில் சோ்க்கவில்லை என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

உயா் கல்விச் சோ்க்கைக்கான கால அவகாசம் நெருங்கி வருவதால், பாதிக்கப்பட்ட மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதுகாக்க மத்தியக் கல்வி அமைச்சகம் உடனடியாகத் தலையிட வேண்டும். இதுகுறித்த விரிவான அறிக்கையை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வேண்டும். தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவா்களின் நலனைப் பாதுகாக்கப் போா்க்கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினேன்.

இந்தக் கடிதத்துக்கு மேலதிக விசாரணைக்காகவும், முன்னுரிமை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் மத்தியக் கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது என்றாா் அவா்.