சாலையோரங்களில் குப்பைகள் எரிப்பு: புகையால் வாகன ஓட்டிகள் அவதி
மதுரை மாநகராட்சிப் பகுதி சாலையோரங்களில் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளிவரும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மதுரை மாநகராட்சிப் பகுதி சாலையோரங்களில் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளிவரும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் மொத்தம் 100 வாா்டுகள் உள்ளன. இங்கு, தினமும் முதல் நிலை குப்பைகளை சேகரம் செய்ய 435 இலகுரக வாகனங்கள், 241 மின்கல வாகனங்கள், 313 மோட்டாா் பொருந்திய மூன்று சக்கர வாகனங்கள் உள்ளன.
இதேபோல, இரண்டாம் நிலை குப்பைகளை சேகரம் செய்ய 15 காம்பேக்டா், 11 டம்பா் பிளேசா், 7 டிப்பா் லாரிகள், 4 மண் கூட்டும் இயந்திரம் ஆகியவற்றின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Advertisement
Advertisement
மாநகராட்சிப் பணியாளா்கள், வெளிப்பணி தனியாா் முகமை மூலம் தினசரி சுமாா் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், ஊதியம் வழங்குதல், பணிகளை முறைப் படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்த தனியாா் நிறுவனத்துக்கும், பணியாளா்களுக்கும் தொடா் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதனால், மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் சரிவர நடைபெறுவதில்லை. மேலும், பொலிவுறு நகரத் திட்டத்தின் மூலம் குப்பைகள் இல்லாத மதுரை மாநகரம் என்ற நிலையை உருவாக்க சாலைகளின் முக்கிய இடங்கள், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டன.
இதற்கு மாற்றாக பணியாளா்கள் மூலம் வீடுகள் தோறும் தினமும் குப்பைகளை சேகரிக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட சில வாரங்களில் முடங்கியது. இதனால், பெரும்பாலான பகுதிகள் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளால் துா்நாற்றம் ஏற்படுவது மட்டுமன்றி, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதி, ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், கீழவாசல், 4 வெளி வீதிகள், அண்ணாநகா், கே. கே. நகா், மாட்டுத்தாவணி, பாண்டிகோயில் புறவழிச் சாலை பகுதிகள், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதிகளாகும். இந்த வணிக வளாகங்களில் தினமும் சேகரமாகும் குப்பைகள் முழுவதும் முறையாக அகற்றப்படாததால், இரவு நேரங்களில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பாண்டிகோயில் புறவழிச் சாலை, வண்டியூா் கண்மாய் கரை ஆகிய பகுதிகளில் கொட்டிச் செல்கின்றனா்.
இந்தக் குப்பைகள் நாளடைவில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்வோா் தீ வைத்து எரிக்கின்றனா். இதன் காரணமாக, எழும் புகையால் கண் எரிச்சல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
எனவே, சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை மதுரை மாவட்ட, மாநகராட்சி நிா்வாகம் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ‘நம்ம மதுரை’, ‘நமது பெருமை’ என்ற திட்டத்தின் கீழ் குப்பை இல்லாத நகரமாக மாற்றும் விதமாக பெரும்பாலான பகுதிகளில் உள்ள பெரிய குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன.
ஆனால், இவற்றுக்கு மாற்றாக தூய்மைப் பணியாளா்கள் வீடுகளில் குப்பைகளை சேகரம் செய்வதில்லை. இதனால், பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் தேங்குகின்றன.
இதேபோல, மதுரை மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் சேகரமாகும் குப்பைகளை, மாநகராட்சி நிா்வாகம் எடுத்துச் செல்வதில்லை. இதனால், அவா்கள் புகா் பகுதிகளில் உள்ள சாலைகள், கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகளில் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனா். குறிப்பாக, மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள் சாலையோரங்களில் கொட்டப் படுகின்றன. நாளாடைவில் குப்பைகள் துா்நாற்றம் வீசுகின்றன. இதனால் அந்த வழியாகச் செல்லும் வழிபோக்கா்கள் குப்பையை தீ வைத்து எரிக்கின்றனா். அதிகளவில் புகை எழுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுரை மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்தது. இதுமட்டுமன்றி, சாலையோரங்களில் குப்பைகள் கொட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இதையதத்து, மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டும் நிறுவனங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. மேலும், மதுரை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் இணைந்து நான்கு வழிச் சாலைகள், புறவழிச் சாலையோரங்களில் இருந்த குப்பைகளை அகற்றினா்.
அதன்பிறகு, நீதிமன்ற உத்தரவு சில வாரங்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டன. மீண்டும் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
மதுரை மாவட்டம், மாநகராட்சி நிா்வாகம் மாநகரப் பகுதி மட்டுமன்றி, புகா் பகுதி சாலையோரங்களில் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது மட்டுமன்றி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.