குப்பைகளை அகற்ற காலக்கெடு: அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
தமிழகத்திலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை காலக்கெடு நிர்ணயித்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.
தமிழகத்திலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை காலக்கெடு நிர்ணயித்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.
சென்னை மாநகராட்சியில் தினந்தோறும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில், சுமார் 3,200 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளாகவும், 2,950 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் மற்றும் சாலை ஓரத்தில் இருக்கும் மண் துகள்களாகவும் சேகரிக்கப்படுகின்றன.
சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் பாத்தி முறையில் உரமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டது. தற்போது, நவீன தொழில்நுட்பத்தில் மக்கும் குப்பைகளான தாவரம், காய்கறி, பழக்கழிவுகள் நொதித்தல் முறையில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாக மாற்றப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் உயிரி எரிவாயு ஆலையில், நாள்தோறும் 140 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகள் எரிவாயுவாக மாற்றப்படுகின்றன. இந்த ஆலை முழுத்திறனில் இயங்கும்போது, தினந்தோறும் சுமார் 4,900 கிலோ உயிரி-எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. அவை சுத்திகரிக்கப்பட்டு, அழுத்தமூட்டப்பட்டு, உருளைகளில் நிரப்பப்பட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
உத்தரவு: இந்நிலையில், சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலையை முதல்வர் ஜோசப் விஜய் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆலையின் செயல்பாடுகள் மற்றும் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் ஈரக்கழிவுகளைப் புதுப்பிக்கத்தக்க எரிபொருளான உயிரி-எரிவாயுவாக மாற்றும் முழுமையான செயல்முறை குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, சென்னை மாநகரில் உருவாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை முழுவதுமாக எரிவாயு மற்றும் உரமாக மாற்ற வேண்டும் என்றும், பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளைச் சாலை அமைக்கவும், சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் மாற்ற மாநகராட்சி அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இப்பணியை தமிழகம் முழுவதும் காலக்கெடு நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே. ராம்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் ப. மதுசூதன் ரெட்டி சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.