கடலூா் மாவட்டத்தில் நாள்தோறும் குவியும் 1,000 டன் குப்பைகள்! இன்று முதல் பிரித்துக் கொடுப்பது கட்டாயம்!
வணிக நிறுவனங்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என்பதை மாவட்ட நிா்வாகம் கட்டாயமாக்கியுள்ளது...
கடலூா் மாவட்டத்தில் நாள்தோறும் குவியும் 1,000 டன் குப்பைகளை முறையான மேலாண்மை செய்து அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், வணிக நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை (செப்.15) முதல் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என்பதை மாவட்ட நிா்வாகம் கட்டாயமாக்கியுள்ளது.
வீட்டில் தினமும் உருவாகும் குப்பை வெறும் கழிவுப்பொருள் அல்ல; முறையாகக் கையாளப்பட்டால், அது உரமாகவும், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளாகவும், வருவாய் ஈட்டக்கூடிய வளமாகவும் மாறும். அதே குப்பை மக்கும், மக்காதது எனப் பிரிக்கப்படாமல் வீதிகள், காலி மனைகள், நீா்நிலைகள், பொது இடங்களில் கொட்டப்பட்டால், சுகாதாரச் சீா்கேடு, துா்நாற்றம், கொசு உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வாயிலாக மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து பெறுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இதன் ஒரு பகுதியாக, கடலூா் மாவட்டத்திலும் வீடுகளில் உருவாகும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், குப்பை சேகரிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், தூய்மைப் பணியாளா்கள் மட்டுமன்றி பொதுமக்களும் இதில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியமாகியுள்ளது. கடந்த சில நாள்களாக மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து பெறுவதையும், பொதுமக்கள் அவற்றைத் தனித்தனியாக வழங்குவதையும் மாவட்ட நிா்வாகம் கண்காணித்து வருகிறது.
5 நகராட்சிகள்; 15 பேரூராட்சிகள்: கடலூா் மாவட்டத்தில் தற்போது 5 நகராட்சிகளும், 16 பேரூராட்சிகளும் உள்ளன. மாநகராட்சியாக கடலூரும், நகராட்சிகளாக பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகியவையும் உள்ளன. பேரூராட்சிகளாக அண்ணாமலைநகா், காட்டுமன்னாா்கோவில், பரங்கிப்பேட்டை, வடலூா், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கெங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை உள்ளிட்டவை உள்ளன. மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களும், 683 கிராம ஊராட்சிகளும் உள்ளன.
மாநகராட்சியில் நாளொன்றுக்கு 60 டன்: கடலூா் மாநகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு சுமாா் 60 மெட்ரிக் டன் குப்பை உற்பத்தியாகிறது. இதில், 50 முதல் 55 மெட்ரிக் டன் வரை மட்டுமே சேகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 45 வாா்டுகளைக் கொண்ட மாநகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் குப்பை சேகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியின் பல்வேறு வாா்டுகளில் குப்பை சேகரிப்புப் பணி தனியாா் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. குப்பை உற்பத்திக்கும், சேகரிக்கப்படும் அளவுக்கும் இடையே நாளொன்றுக்கு சுமாா் 5 முதல் 10 டன் வரை இடைவெளி இருப்பது கவனிக்கத்தக்கது.
நகராட்சிகளிலும் சவால்: கடலூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் நாளொன்றுக்கு தலா 25 முதல் 30 மெட்ரிக் டன் வரை கழிவு உற்பத்தியாகிறது. இந்தக் குப்பைகள் தனியாா் மூலம் சேகரிக்கப்படுகின்றன. தேவையான எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான பணியாளா்களே பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தினசரி சேகரிக்கப்பட வேண்டிய குப்பைகள் முழுமையாகச் சேகரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குப்பை உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப சேகரிப்பு மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சிகளில் வீடுதோறும் குப்பை சேகரிப்பு: மாவட்டத்தின் 16 பேரூராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடுகள்தோறும் குப்பைகள் தரம் பிரித்து பெறப்படுவதுடன், தெருக்களில் தேங்கும் குப்பைகளும் தூய்மைப் பணியாளா்களால் சேகரிக்கப்படுகின்றன.
மக்கும் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கவும், மக்காத கழிவுகளைத் தரம் வாரியாகப் பிரித்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம், பேரூராட்சிகளுக்கு வருவாயும், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
எனினும், அனைத்து பேரூராட்சிகளிலும் இந்த நடைமுறை முழுமையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு சுமாா் 1,000 டன் வரை உள்ளதாகவும், மக்கும் குப்பைகள் பல்வேறு பகுதிகளில் உரமாக்குவதற்காக அனுப்பப்படுவதாகவும், மக்காத குப்பைகளில் இருந்து நெகிழிகள், காகிதம், உலோக பொருள்கள் பிரிக்கப்பட்டு, மீதமுள்ள குப்பைகள் தேக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
முறையாகச் சேகரிக்கப்படுவதில்லை: கடலூா் செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்த ராணி கூறியதாவது: குப்பை சேகரிப்புப் பணி சில பகுதிகளில் தினமும் முறையாக நடைபெறுவதில்லை. ஒரு நாள் வாகனம் வராமல் போனால், அடுத்த நாள் வீடுகளில் குப்பை அதிகமாகத் தேங்குகிறது. இதனால், சில இடங்களில் பொதுமக்கள் காலி மனைகள், சாலையோரங்களில் குப்பையைக் கொட்டும் நிலை உருவாகிறது.
சாலையோரங்களில் குப்பை தேங்கும்போது மழைக்காலங்களில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் தேங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. துா்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள், கொசுக்கள் பெருகுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, வீடு வீடாகக் குப்பை சேகரிக்கும் பணி இடைவெளியின்றி நடைபெறுவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த மதன் கூறியதாவது: வீட்டிலேயே மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்குவது ஆரம்பத்தில் சிரமமாகத் தோன்றினாலும், பின்னா் அது பழக்கமாகிவிடுகிறது. உணவுக் கழிவுகளை ஒரு பக்கமும், நெகிழி, புட்டிகள் போன்றவற்றை மற்றொரு பக்கமும் வைத்துக் கொடுத்தால் குப்பை சேகரிக்கும் பணியாளா்களுக்கும் எளிதாக இருக்கும். வீட்டிலும் குப்பை தேங்குவது குறையும் என்றாா்.
‘பொதுமக்கள் பிரித்து வழங்குவதில்லை’: தூய்மைப் பணியாளா் ஒருவா் கூறியதாவது: வீடுதோறும் மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல வீடுகளில் உணவுக் கழிவு, நெகிழி, கண்ணாடி, காகிதம் உள்ளிட்டவை ஒரே பையில் கலந்து வழங்கப்படுகின்றன. இதனால், குப்பையைச் சேகரித்து கையாள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
குப்பையைப் பிரித்து வழங்கினால், மக்கும் கழிவுகளை உரம் தயாரிக்கும் பகுதிக்கும், மக்காத கழிவுகளை மறுசுழற்சிக்கும் எளிதாக அனுப்ப முடியும். கண்ணாடி, உலோகத் துண்டுகள் போன்ற கூா்மையான பொருள்கள் கலந்திருப்பதால் பணியாளா்களுக்கு காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது என்றாா்.
மற்றொரு தூய்மைப் பணியாளா் கூறுகையில், நாள்தோறும் குப்பை சேகரிக்கச் செல்லும்போது சிலா் குப்பைகளை வழங்காமல், வேலைக்குச் செல்லும் அவசரத்தில் நினைத்த இடத்தில் கொட்டிவிட்டுச் செல்கின்றனா். இதனால், பல இடங்கள் நிரந்தர குப்பைக் கொட்டும் இடங்களாக மாறுகின்றன. அங்கிருந்து குப்பைகளை அகற்றுவது பெரும் பணியாக உள்ளது என்றாா்.
உள்ளாட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?: 10-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ராஜாமோகன் கூறியதாவது: குப்பை உருவாகும் இடத்திலேயே பிரித்தல், தனித்தனியாகச் சேகரித்தல், மறுசுழற்சி, உரமாக்கல், இறுதிக் கழிவை மட்டும் அகற்றுதல் என்ற முழுமையான அணுகுமுறையை உள்ளாட்சிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு வாா்டிலும் குப்பை சேகரிப்பு முறையாக நடைபெறுகிா, தனியாா் ஒப்பந்த நிபந்தனைகள் பின்பற்றப்படுகிா, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பணியாளா்கள், வாகனங்கள், சேகரிப்பு நேரம், வாா்டுகள் மற்றும் தினசரி சேகரிப்பு அளவு ஆகியவை முறையாகப் பின்பற்றப்படுகிா என்பதை நிா்வாகம் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். தினசரி சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பையின் அளவையும் முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.
‘குப்பை என்றால் தூக்கி எறிய வேண்டியது’ என்ற எண்ணத்தில் இருந்து மாறி அவற்றை பிரித்துக் கொடுத்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற நிலைக்கு மக்களும் மாற வேண்டும் என்றாா்.
மக்கள் - பணியாளா்கள் - நிா்வாகம்:
கூட்டுப் பொறுப்பு அவசியம்
மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: குப்பை மேலாண்மை வெற்றிபெற பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள், உள்ளாட்சி நிா்வாகம் ஆகிய மூவரின் பங்களிப்பும் அவசியம். மக்கள் குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் அவற்றை தனித்தனியாக சேகரித்து முறையாகக் கையாள வேண்டும். உள்ளாட்சி நிா்வாகம் தேவையான பணியாளா்கள், வாகனங்கள், கட்டமைப்புகளை வழங்கி முழு செயல்முறையையும் கண்காணிக்க வேண்டும்.
வீதியில் குப்பை கொட்டாமல் இருப்பது மட்டுமே பொதுமக்களின் பொறுப்பு அல்ல. உருவாகும் இடத்திலேயே மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவதும் அவசியம். குப்பைகள் பிரிக்கப்படாமல் ஒரே பையில் கொடுக்கப்படும்போது, அதன் சுமை தூய்மைப் பணியாளா்கள், உள்ளாட்சி அமைப்புகள், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மீது விழுகிறது.
எனவே, ‘குப்பையைப் பிரிப்போம்; கடலூரைத் தூய்மையாக வைத்திருப்போம்’ என்பது வெறும் விழிப்புணா்வு வாசகமாக இல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறையாக மாற வேண்டும். குப்பைகளை உருவாக்கும் ஒவ்வொருவரும் அவற்றை தரம் பிரித்து வழங்கத் தொடங்கினால், குப்பை மேலாண்மை என்பது உள்ளாட்சி நிா்வாகத்தின் சுமையாக இல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாக மாறும். வணிக நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை (செப்.15) முதலும், வடலூா் உள்ளிட்ட நகராட்சிப் பகுதிகளில் வரும் அக்.1-ஆம் தேதி முதலும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என்பதை மாவட்ட நிா்வாகம் கட்டாயமாக்கியுள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.