பழனி கோயில் நில முறைகேடு விவகாரம்: சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் கைது
பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டாயுதபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு காமராஜா்நகரைச் சோ்ந்த த. முருகதாஸ் (56), நிலத்தை வாங்கிய
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளத்தைச் சோ்ந்த கா. வெள்ளைத்துரை (60), பழனியை அடுத்த ஆயக்குடி புதூரையைச் சோ்ந்த து. சேதுபதி உள்ளிட்டோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
இவா்களில், முருகதாஸ், வெள்ளைத்துரை, சேதுபதி, உடந்தையாகச் செயல்பட்ட பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் அன்வா்தீன் (65) ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்தனா்.
இதனிடையே, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இடைக்கால முன்பிணை பெற்று சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த 3-ஆம் தேதி வரை முன்னிலையாகி வந்தாா்.
இந்த நிலையில், ஜஸ்டின் மணிகண்டனுக்கு வழங்கிய இடைக்கால முன்பிணையை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுவையும் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனைக் கைது செய்வதற்கு சிபிசிஐடி போலீஸாா் தீவிரம் காட்டினா். இதையறிந்த ஜஸ்டின் மணிகண்டன், கொடைக்கானல் மலைப் பகுதியில் தலைமறைவாக இருப்பதற்காக வியாழக்கிழமை காரில் புறப்பட்டுச் சென்றாா். அந்த காா் கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் சென்ற போது, போலீஸாா் ஜஸ்டின் மணிகண்டனைக் கைது செய்தனா்.
கொடைக்கானலில் இருந்து அவரை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, முதலாவது நீதித் துறை நடுவா்மன்றத்தில் ஜஸ்டின் மணிகண்டன் முன்னிலைப்படுத்தப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.