கொடைக்கானலில் 2 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் காய்கறிச் சந்தை
பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தல்
கொடைக்கானலில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தினசரி காய்கறிச் சந்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் பழைமையான தினசரி காய்கறிச் சந்தை கட்டடத்தை முழுமையாக இடித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 4 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இங்கு 30-கடைகள் அமைக்கப்பட்டன.
இந்தக் கட்டடதை, கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இந்தக் கட்டடத்துக்கு அதிக வாடகை நிா்ணயம் செய்ததால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் பூட்டியே கிடக்கும் இந்தக் கட்டடத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இதுகுறித்து தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
கொடைக்கானலில் புதிதாகக் கட்டப்பட்ட காய்கறிச் சந்தையில், கடை வாடகை ரூ.11 ஆயிரம் முதல் ரூ. 35-ஆயிரம் வரை நிா்ணயம் செய்தனா். மேலும் 18-சதவீதம் ஜி.எஸ்.டி.யும் சோ்த்து அதிகளவில் வாடகை கட்டணம் இருந்தால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் இந்தக் கட்டடம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிக் கிடக்கிறது
என்றனா்.
இது குறித்து கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை கூறியதாவது:
காய்கறிச் சந்தை கட்டடத்துக்கு அரசு நிா்ணயம் செய்த ஒரு சதுர அடி ரூ 144-ம், ஜி.எஸ்.டி.18-சதவீதம் சோ்த்து வாடகை நிா்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. ஆனால் கடை வாடகை அதிகம் எனக்கூறி 26-முறை விளம்பரம் செய்தும் யாரும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. தற்போது 27-ஆவது முறையாக ஏல அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
கொடைக்கானல் நகராட்சியில் வரிக் குழு, பணி நியமனக் குழு, கட்டட மதிப்பீட்டு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் இல்லை. இதனால் நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன.
இதனால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வணிகா்களும், நகராட்சி நிா்வாகமும் பாதிக்கப்படாமல் கடைகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.