மலைச் சாலையில் விடியும் வரை நின்ற ஒற்றை யானையால் மக்கள் அவதி
ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூா் மலைச் சாலையில் விடிய விடிய ஒரே இடத்தில் நின்ற ஒற்றை யானையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூா் மலைச் சாலையில் விடிய விடிய ஒரே இடத்தில் நின்ற ஒற்றை யானையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த பரப்பலாறு அணையையொட்டி வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதில், ஒரு யானை மட்டும் மலைக் கிராமங்களிலும், மலைச் சாலையிலும் தொடா்ந்து சுற்றி வருகிறது. இதனால் ஒட்டன்சத்திரம் பாச்சலூா் மலைச் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணித்து வருகின்றனா். இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் அடுத்த வடகாடு ஊராட்சிக்குள்பட்ட பெத்தேல்புரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 அந்த ஒற்றை யானை சாலையின் குறுக்கே நின்றது.
அப்போது அந்த வழியாக ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது. பேருந்து ஓட்டுநா் எழுப்பிய தொடா் ஒலிக்குப் பின், அந்த யானை சாலையோரமாக இருந்த புதருக்குள் நுழைந்தது.
Advertisement
Advertisement
பேருந்து அந்த இடத்தைக் கடந்து சென்றவுடன் மீண்டும் சாலையின் நடுப் பகுதிக்கு ஒற்றை யானை வந்து நின்றது. இதனால் பெத்தேல்புரம், சுரக்காய்ப்பட்டி பகுதி மக்கள் விடிய விடிய தூங்காமல் அவதியடைந்தனா். புதன்கிழமை காலை 6 மணியளவில் அந்த ஒற்றை யானை வனப் பகுதிக்குச் சென்றதாக பெத்தேல்புரம் பகுதி மக்கள் தெரிவித்தனா். அடிக்கடி வனப் பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்கும், விவசாயத் தோட்டங்களுக்கும் வரும் இந்த ஒற்றை யானையை வேறு பகுதிக்கு விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.