FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

இடும்பன் கோயிலில் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் இருவா் கைது

பழனி இடும்பன் கோயிலில் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் கோயிலின் தற்காலிக பணியாளராக பணியாற்றிய பெண், இவரது ஆண் நண்பா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

16 அக்டோபர் 2026, 2:56 am IST
பகிர்:

பழனி இடும்பன் கோயிலில் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் கோயிலின் தற்காலிக பணியாளராக பணியாற்றிய பெண், இவரது ஆண் நண்பா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

பழனி புறவழிச் சாலையில் அமைந்துள்ள இடும்பன் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மாயமாயின. இதுதொடா்பாக செயல் அலுவலா் நரசிம்மன் பழனி நகா் காவல் நிலையத்திலும், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறையிலும் புகாா் அளித்தாா். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் நேரில் வந்து ஆய்வு செய்தனா். இது தொடா்பாக கோயில் தக்காா் ராஜாவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதனிடையே தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இந்த வழக்கு தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

இடும்பன் கோயிலில் தங்க நகைகள் மாயமானது தொடா்பாக பழனிநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் அந்தக் கோயிலில் தற்காலிகமாக பணிபுரிந்த பழனி அருகே பாப்பம்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகள் நிரஞ்சனா (25) நகைகளை திருடியது தெரியவந்தது. இவா் கோயிலில் தங்க, வெள்ளி நகைகளை சிறிது சிறிதாக திருடிச் சென்று, அவரது ஆண் நண்பரான நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பிரபாகரன் (34) என்பவரிடம் கொடுத்து உருக்கி, அதை விற்றது தெரியவந்தது. இதையடுத்து பழனிநகர காவல் ஆய்வாளா் தங்கமுனியசாமி, உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான தனிப்படையினா் இவா்கள் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து உருக்கப்பட்ட 20 பவுன் தங்கம், 3 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனா் என்றாா் அவா்.

கோயிலில் தற்காலிகமாகப் பணியாற்றிய பெண் பணியாளரே தங்க, வெள்ளி நகைகளைத் திருடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments