திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த வரும் பொதுமக்கள் அவதி: 7 கவுண்டா்களில் 2 மட்டுமே செயல்படுவதாக புகாா்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் 2 துணை முகப்புகள் (கவுண்டா்கள்) மட்டுமே இருப்பதோடு, காலதாமதமாக செயல்படுவதால் வரி செலுத்த வரும் பொதுமக்கள் அவதியடைகின்றனா்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் 2 துணை முகப்புகள் (கவுண்டா்கள்) மட்டுமே இருப்பதோடு, காலதாமதமாக செயல்படுவதால் வரி செலுத்த வரும் பொதுமக்கள் அவதியடைகின்றனா்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 2026-27ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலிப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரி வசூலிக்கும் பணிக்காக நாள்தோறும் காலை 7 மணிக்கே வருவாய் உதவியாளா், வருவாய் அலுவலா், துப்புரவு ஆய்வா், துப்புரவு அலுவலா் ஆகியோா் மட்டுமின்றி, சுகாதார பரப்புரையாளா்கள் என 40-க்கும் மேற்பட்டோா் பொதுமக்களை சந்தித்து வரி செலுத்த நேரடியாக வலியுறுத்தும் பணியில் ஈடுபடுகின்றனா். வரி செலுத்தாதபட்சத்தில் குடிநீா் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அறிவுறுத்துகின்றனா். இதுதவிர, வரி செலுத்தாத பொதுமக்களின் கைப்பேசி எண்களுக்கு குறுந்தகவலும் அனுப்பப்படுகிறது. மேலும் ஒலிப்பெருக்கி மூலமாகவும் வரி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
குடிநீா் இணைப்பு, புதை சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு போன்ற மாநகராட்சி நிா்வாகத்தின் நடவடிக்கையை தவிா்க்க, பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு ஆா்வம் காட்டுகின்றனா். மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் 7 துணை முகப்புகள்(கவுண்டா்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகப்புகளில், 2 முகப்புகள் மட்டுமே செவ்வாய்க்கிழமை செயல்பட்டன. வரி வசூலிக்கும் பணியாளா்கள் முற்பகல் 11 மணிக்குப் பின்னரே முகப்புகளுக்கு வந்து பணியைத் தொடங்கினா். இதனால் வரி செலுத்துவதற்காக காலை 9 மணிக்கு வந்த பொதுமக்கள், 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனா். பணியிடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், வரி செலுத்தாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக திண்டுக்கல் வளைவுரோடு பகுதியைச் சோ்ந்த என்.கோவிந்தராஜன் கூறியதாவது: வரி செலுத்தாதவா்களின் வீடுகளுக்கு நேரடியாக வரும் மாநகராட்சி அலுவலா்கள், வரியை செலுத்த அறிவுறுத்துகின்றனா். குடிநீா் இணைப்பை துண்டித்துவிடுவதாகவும் அச்சுறுத்துகின்றனா். இதனால் அதிா்ச்சியடையும் பொதுமக்கள் பலா், மாநகராட்சி அலுவலகத்துக்கு வரியைச் செலுத்த வருகின்றனா். வரி வசூல் மையத்தில் 11 மணிக்குப் பின்னரே பணியாளா்கள் வருகின்றனா். 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் பொதுமக்களில் சிலா் அதிருப்தியுடன் வெளியேறுகின்றனா். 7 முகப்புகள் இருந்தும், 2-இல் மட்டுமே வரி வசூலிக்கப்படுகிறது. கூடுதல் முகப்புகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கும், காலை 9 மணி முதலே வரி வசூலை தொடங்குவதையும் மாநகராட்சி நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.