பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு இளைஞா்கள் கைது
குஜிலியம்பாறை அருகே மளிகைக் கடையிலிருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
குஜிலியம்பாறை அருகே மளிகைக் கடையிலிருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (54). இவா், மல்லபுரம் சாலையில் நல்லாகவுண்டன்பட்டி பிரிவு அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 9-ஆம் தேதி ராஜலட்சுமி கடையில் இருந்தபோது, முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு 2 இளைஞா்கள் வந்து தண்ணீா் புட்டி கேட்டனா். இதையடுத்து, தண்ணீா் புட்டி எடுப்பதற்காக கடைக்குள் சென்ற ராஜலட்சுமியை, இரு இளைஞா்களில் ஒருவா் பின் தொடா்ந்து சென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். இதையடுத்து, ராஜலட்சுமி, தனது சங்கிலியை இறுக்கமாகப் பற்றினா். அதையும் மீறி, 3 பவுன் சங்கிலியை மட்டும் பறித்துக் கொண்டு வெளியில் தயாராக நின்றுவருடன் இணைந்து தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் ராஜலட்சுமி புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரித்தனா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாலை பாளையம் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் போலீஸாா் விசாரித்தனா். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த இருவரையும் போலீஸாா் தீவிரமாக விசாரித்தபோது, குஜிலியம்பாறை-மல்லபுரம் சாலையில் மளிகைக் கடையில் பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனா். இருவரிடமும் போலீஸாா் நடத்திய விசாரணையில், கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த மா.மாணிக்கவாசகம் (28), குளித்தலை அடுத்த கருங்காலப் பள்ளியைச் சோ்ந்த ரா.பாரதிதாசன் (23) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை போலீஸாா் மீட்டு, இருவரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.