FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரையில் முழு கடையடைப்பு: பேருந்து, ஆட்டோக்கள் இயங்கவில்லை

திமுக தலைவர் மு. கருணாநிதி மறைவையொட்டி மதுரை நகரில் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திமுக தலைவர் மு. கருணாநிதி மறைவையொட்டி மதுரை நகரில் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன. பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 
 திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி சென்னை தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.  இதையடுத்து கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மதுரை நகரில் அனைத்துக் கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டன. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை.   
 நகரின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார், அண்ணா பேருந்து நிலைய பகுதி,  தல்லாகுளம், பழங்காநத்தம் உள்ளிட்ட  பகுதிகள் வாகன ஓட்டம் இன்றி காணப்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. நகரில் உள்ள அனைத்து  பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருந்தன.  திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. அரசு மருத்துவமனை பகுதியில் மட்டும் நோயாளிகள் மற்றும் உடனிருப்பவர்களின் தேவைக்காக ஒரு சில உணவகங்கள், சில டீ கடைகள் திறக்கப்பட்டிருந்தன.   
 மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்துநிலையம்,  ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூருக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் நடமாட்டமின்றி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின.  
 மதுரை நகரின் முக்கியப் பகுதிகளான தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், கீழமாசி வீதியில் உள்ள பலசரக்கு மொத்த வியாபாரக் கடைகள், வடக்குமாசி வீதியில் பழ மொத்த வியாபாரக் கடைகள் மற்றும் லாரி நிறுவனங்கள், கீழமாரட் வீதியில் உள்ள வெங்காயச் சந்தை, தயிர் மார்க்கெட் பகுதியில் உள்ள வாழைப்பழ மொத்த விற்பனைக் கடைகள், காய்கறி மார்க்கெட் ,  மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் சில்லறை மற்றும் மொத்த விற்பனைக் கடைகளும் அடைக்கப்பட்டன. 
நகரில் உள்ள உணவு விடுதிகள்,  வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் அடைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
 மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் காவல் துணை ஆணையர்கள் சசிமோகன்(சட்டம் ஒழுங்கு), ஜெ.மகேஷ்(தலைமையிடம்) அருண் கோபாலன் (போக்குவரத்து) ஆகியோர் நகர் முழுவதும் ரோந்து சென்று கண்காணிப்புப் பணிகளை பார்வையிட்டனர். இதனால் மதுரை நகரில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியாக இருந்தது. 
ஊரகப் பகுதிகளான வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, ஒத்தக்கடை, தே.கல்லுப்பட்டி, பேரையூர், சேடப்பட்டி, ஊமச்சிகுளம், செக்கானூரணி, கருப்பாயூரணி, பரவை, சமயநல்லூர், அப்பன்திருப்பதி, அழகர்கோவில் மற்றும் கிராமப் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. 
மதுரை நகரில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தபோதும், வாடிக்கையாளர்கள் வராததால் வங்கிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments