FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நெய்வேலி அருகே போலீஸாரை வெட்டிவிட்டு தப்பியோடமுயன்ற ரௌடி சுட்டுப்பிடிப்பு!

நெய்வேலி அருகே போலீஸாரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது குறித்து...

போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரௌடி கோபி - டிஎன்எஸ்
பகிர்:

கடலூர்: நெய்வேலி அருகே போலீஸாரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரௌடியை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். இந்தச் சம்பவத்தில் இரண்டு தலைமைக் காவலர்கள் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரௌடி ஆனந்தராஜ் (36). இவருக்கும், கீழ்வடக்குத்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரௌடி கோபி (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கோபி மீது ஏற்கெனவே 2 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி கோபி தனது கூட்டாளிகள் 16 பேருடன் சென்று ஆனந்தராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், இந்திரா நகரைச் சேர்ந்த நரேஷ்குமார் (26) சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து உயிரிழந்த நரேஷ்குமாரின் தாய் அம்மு (47) அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 16 பேரில் 14 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ரௌடி கோபியை பல்வேறு இடங்களில் போலீஸார் தேடி வந்தனர்.

ரௌடியை சுற்றிவளைத்த போலீஸார்

இதற்கிடையே, முத்தாண்டிக்குப்பம் பகுதியில் ரௌடி கோபி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நெய்வேலி நகர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட புலவன்குப்பம் சாலையில் உள்ள ஒதியடிவீரன் கோயில் அருகே விரைந்து சென்றனர்.

அங்கு பதுங்கியிருந்த கோபியை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற கோபி, தன்னிடம் இருந்த அரிவாளால் போலீஸாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் தலைமைக் காவலர் பாண்டியராஜன் (33) இடது கையிலும், மற்றொரு தலைமைக் காவலரான விஜயலாதசோழன் (36) இடது முழங்கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

முழங்காலில் துப்பாக்கிச் சூடு

இதையடுத்து கோபியைத் தாக்குதலை நிறுத்தும் வகையிலும், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தனது கைத்துப்பாக்கியால் கோபியின் வலது முழங்காலில் இரண்டு முறை சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்து கீழே விழுந்த கோபியை போலீஸார் மடக்கிப் பிடித்து நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கோபிக்கு நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த தலைமைக் காவலர்கள் பாண்டியராஜ் மற்றும் விஜயலாதசோழன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

summary

Rowdy shot and captured near Neyveli after hacking police personnel and attempting to flee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments