மடீட்சியாவில் நாளை முதல் தொழில் வர்த்தகக் கண்காட்சி
மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சார்பில் டிச. 20 முதல் 23 ஆம் தேதி வரை
மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சார்பில் டிச. 20 முதல் 23 ஆம் தேதி வரை மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கில் தொழில் வர்த்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து மடீட்சியா தலைவர் கே.பி. முருகன், கண்காட்சித் தலைவர் ஜெ. அசோக் ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
மடீட்சியா சார்பில் "இன்ட் எக்ஸ்போ 2018' தொழில் கண்காட்சி ஐடா ஸ்கட்டர் அரங்கில் டிச. 20 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொழில் துறையில் வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களை நவீனப்படுத்துவது குறித்த இக்கண்காட்சியில் திரவ, வாயு அழுத்தத்தால் இயங்கும் இயந்திரங்கள், விவசாயம் சார்ந்த உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் இயந்திரங்கள், பிரிண்டிங் மற்றும் பேக்கேஜிங் இயந்திரங்கள், ஜவுளித் தொழில், ரப்பர், பிளாஸ்டிக், எலக்ட்ரிக்கல் மற்றும் மின்னணு இயந்திர நிறுவனங்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், பி. பெஞ்சமின் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்க உள்ளனர். இதற்கு அனுமதி இலவசம் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.