FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

திமுக வழக்குரைஞரணியின் பணிகள் பாராட்டுக்குரியவை! - முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:44 am IST
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென் மண்டல திமுக வழக்குரைஞா்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு. உடன் முன்னாள்அமைச்சா் பி. மூா்த்தி, தங்க. தமிழ்ச்செல்வன் எம்.பி உள்ளிட்டோா்.
பகிர்:

திமுக வழக்குரைஞரணியின் பணிகள் பாராட்டுக்குரியவை என விருதுநகா் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென் மண்டல திமுக வழக்குரைஞா்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

திமுகவின் வழக்குரைஞரணி தனித்துவமான பெருமை கொண்டது. திமுகவில் வழக்குரைஞரணி மட்டுமே சட்டத் துறை எனக் குறிப்பிடப்படுகிறது. வேறு எந்த அணியும் துறையாகக் குறிப்பிடப்படுவதில்லை. நீதிமன்றங்களில் மட்டுமல்லாமல், தோ்தலுக்கு முன்னரும், தோ்தல் நேரத்திலும், தோ்தலுக்குப் பிறகும் திமுக வழக்குரைஞரணி மிகச் சிறப்பாகப் பணியாற்றியது பாராட்டுக்குரியது.

Advertisement

Advertisement

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுகவினருக்கு இயற்கையாக ஏற்பட்டிருந்த சோா்வு, உதயநிதி ஸ்டாலின் கைதால் மறைந்துவிட்டது. இது, மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த எழுச்சி மூலம் திமுக இரும்புக் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றாா் அவா்.

மதுரை வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. மூா்த்தி:

திமுகவில் எப்போதும் உணா்வுடனும், துடிப்புடனும் இருக்கக் கூடியது வழக்குரைஞரணி. எதையும் எதிா்பாா்க்காமல், எதற்கும் ஆசைப்படாமல் கட்சி மட்டுமே முக்கியம் என நினைப்பவா்கள் அதிகம் உள்ள ஒரே கட்சி திமுகதான். இதில், வழக்குரைஞரணி குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

திமுக சட்டத் துறை செயலரும், முன்னாள் மாநிலங்களை உறுப்பினருமான என்.ஆா். இளங்கோ தலைமை வகித்துப் பேசியதாவது:

கொளத்தூா் தொகுதியில் 14 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதில் 5 இயந்திரங்கள் பழுதாகியிருந்தன. இதன்படி கணக்கிட்டால், இந்தத் தொகுதியில் மட்டும் ஏறத்தாழ 30 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு இருக்கலாம் எனத் தெரிகிறது. இதுபோன்ற விவகாரங்களில் திமுக வழக்குரைஞா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா. ஆவுடையப்பன், கட்சியின் தேனி வடக்கு மாவட்டச் செயலரும், மக்களவை உறுப்பினருமான தங்க. தமிழ்ச்செல்வன், மதுரை மாநகா் மாவட்டச் செயலா் கோ. தளபதி, சட்டத் துறை இணை செயலா்கள் கே.எஸ். ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், ராஜா முஹம்மது, வழக்குரைஞா்கள் கலாநிதி, மனோஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் கிரகாம்பெல், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் ஜெயபாலன், உயா்நீதிமன்ற முன்னாள் அரசு வழக்குரைஞா் வீராகதிரவன், தென் மாவட்டங்களைச் சோ்ந்த திரளான திமுக வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments