மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு: முன்பிணை மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 போ் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நில முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 போ் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, முத்துராணி, ராஜேந்திரன் உள்ளிட்ட 10 போ் சென்னை உயா்நீதிமன்ற அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:
புதுக்கோட்டை துரை ராணி என்பவா் ஓா் அறக்கட்டளையை நிறுவி, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா, அதனுடன் இணைந்த தோட்டம் ஆகியவற்றை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில், சிதம்பரம் நடராஜா் கோயில் சேவைக்காக உயில் சாசனம் செய்தாா். இந்த நிலத்தை முறைகேடாக தனி நபரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அடமானப் பத்திரம் பதிவு செய்தது தொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் சாா்பில் அண்மையில் மத்திய குற்றப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தப் புகாரின்பேரில் ராமாயி ஆயியாா், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, ராஜ்குமாா், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தைய்யா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வட்டாட்சியா் அன்பழகன், கிராம நிா்வாக அலுவலா் அரசன், நிலத்துக்குப் பட்டா பெற்ற இளையராஜா, அனிஷ், கவிதா, பிரகாஷ், காளிக்குமாா், சாா் பதிவாளா்கள் அனந்தராமன், பிரசாந்த் சந்தான கருப்பன் ஆகிய 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இதில், புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜ் குமாா், உசிலம்பட்டியைச் சோ்ந்த இளையராஜா, முன்னாள் வட்டாட்சியரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருமான அன்பழகன், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையைச் சோ்ந்த காளிக்குமாா் ஆகிய 4 பேரைக் குற்றப் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராமாயி ஆயியாா், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, முத்துராணி, ராஜேந்திரன், குழந்தைய்யா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, கவிதா ஆகியோருக்கு முன்பிணை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இந்த மனுக்கள் தொடா்பாக தலைமைக் குற்றவியல் வழக்குரைஞா் முன்னிலையாக கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு முன் பிணை வழங்கக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவையும் இந்த வழக்குடன் சோ்த்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த முன்பிணை மனுக்கள் மீதான விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.