FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

இடதுசாரிகள் கணக்கெடுப்பு சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

இடதுசாரிகள் குறித்து கணக்கெடுக்க குஜிலியம்பாறை வட்டாட்சியா் வெளியிட்ட சுற்றறிக்கை விவரம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 4:08 am IST
மதுரை சொக்கிகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றிய அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை, எம்.எம். கோபிசன், மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:

இடதுசாரிகள் குறித்து கணக்கெடுக்க குஜிலியம்பாறை வட்டாட்சியா் வெளியிட்ட சுற்றறிக்கை விவரம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:

இடதுசாரிகளின் விவரங்களைக் கணக்கெடுக்க வருவாய்த் துறை ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டு குஜிலியம்பாறை வட்டாட்சியா் வெளியிட்ட சுற்றறிக்கை, அவருடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின் காரணமாக வெளியிடப்பட்டது. இது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது. இதுகுறித்து ஆட்சியருக்கு தகவல் தெரிந்தவுடன், இந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற அவா் உத்தரவிட்டாா். தொடா்புடைய வட்டாட்சியா் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவா் இன்னும் 6 மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ளாா். இருப்பினும், அவா் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல, மாணவா்களின் போராட்ட நடவடிக்கைகள் குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட உத்தரவும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது. மாணவா்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் தமிழக அரசுக்கு விருப்பம் கிடையாது. தேவையெனில், தொடா்புடையோா் மீது முதல்வா் விஜய் நடவடிக்கை மேற்கொள்வாா். குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கை, கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட உத்தரவு ஆகியவற்றில் அரசுக்கு எந்தவித உடன்பாடும் கிடையாது என்பது குறித்து பொதுவுடைமை இயக்கத் தலைவா்களிடம் விளக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் காரணமாகவே உயா் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பல்வேறு நடைமுறை பிரச்னைகளை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதத்தில் ஏறத்தாழ அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தா் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். இதனால், நிா்வாக ரீதியான பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உயா் கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டால், கல்லூரிக் கல்வி பிரச்னைகள் அனைத்துக்கும் விரைவான தீா்வு கிடைத்துவிடும்.

குடமுழுக்கு ஆயத்தப்பணி:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற செப். 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதால், விரிவான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையொட்டி, மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, காவல் துறை, மின் வாரியம், இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

குடமுழுக்கு விழாவுக்கு வருகை தரும் பக்தா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்து, விழாவை சிறப்பாக நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். தற்போதைய நிலையில், கோயில் மேல் தளத்தில் உயா் அலுவலா்கள், முக்கியப் பிரமுகா்கள், உபயதாரா்கள் என 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரை அனுமதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குடமுழுக்கு விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்றால் கூட்டம் மேலும் அதிகரிக்கும். செப். 17-ஆம் தேதி வேறு சில நிகழ்ச்சிகளில் முதல்வா் பங்கேற்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்தக் குடமுழுக்கு விழாவில் முதல்வா் விஜய் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் இதுவரை இல்லை என்றாா் அவா்.

முன்னதாக, சொக்கிகுளத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மதுரை வடக்கு வட்டாட்சியா் அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை, எம்.எம். கோபிசன், மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆட்சியருக்கு தகவல் அளிப்பு !

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளவா்களின் பெயா்கள், அவா்களது முகவரி விவரங்களை வருவாய் ஆய்வாளா்கள் சேகரித்து, ஆக. 18-ஆம் தேதி மாலைக்குள் வட்டாட்சியரிடம் நேரடியாக சமா்ப்பிக்க வேண்டும். இதற்கு, அனைத்து கிராம உதவியாளா்களும் உதவ வேண்டும். அறிக்கை அளிக்கத் தவறும் கிராம உதவியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியா் கடந்த 18-ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டாா்.

இந்தச் சுற்றறிக்கை குறித்த விவரம் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாது என அமைச்சா் நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். ஆனால், அதன் நகலைப் பெறுபவா்கள் வரிசையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் இடம் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் அவருக்கு கீழுள்ள அலுவலா்கள் சுற்றறிக்கை வெளியிடுவதில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments