மு.க. அழகிரி மகன் துரை தயாநிதிக்கு மருத்துவப் பரிசோதனை: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!
துரை தயாநிதியின் உடல்நிலை, மனநிலை குறித்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மதுரை சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திமுக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நிலை, மனநிலை குறித்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மதுரை சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக குவாரி அமைத்து கிரானைட் கற்களை வெட்டியெடுத்தாக திமுக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது கீழவளவு காவல் நிலையத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் முதல் தகவல் அறிக்கை பதிவானது.
இதனடிப்படையில், ரூ. 256.44 கோடியில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக துரை தயாநிதி உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கின் விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதனிடையே, நரம்பியல் குறைபாடு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகளால் துரை தயாநிதி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, ஏற்கெனவே அவா் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், துரை தயாநிதியின் உடல்நலம் குறித்து சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையும் அப்போது சமா்ப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், அமலாக்கப் பிரிவு தொடுத்த சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் துரை தயாநிதி மீதான விசாரணை மட்டும் தனியே பிரிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை முன்னிலையான வழக்குரைஞா், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள துரை தயாநிதி உடல் நலத்துடன் உள்ளாா் எனவும், அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், நீதிமன்ற விசாரணைக்கு அவா் நேரில் முன்னிலையாகவும் உத்தரவிடக் கோரினாா்.
மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை துரை தயாநிதி நேரில் பாா்த்தது, அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் வாக்களித்தது தொடா்பான விடியோ, புகைப்பட ஆதாரங்களையும் சிபிஐ தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா்.
அப்போது, துரை தயாநிதிக்கு நரம்பியில் குறைபாடு இருப்பது ஏற்கெனவே நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகும் விடியோ, புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கூடாது என துரை தயாநிதி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் வாதிட்டாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். சண்முகவேல், கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பாா்க்கவும், தோ்தலில் வாக்களிக்கவும் முடிந்த துரை தயாநிதிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகி விசாரணையை எதிா்கொள்வதில் என்ன தடை என கேள்வி எழுப்பினாா்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: துரை தயாநிதியின் தற்போதைய மனநிலை, அவரது புரிந்துகொள்ளும் திறன், உடல் தகுதி ஆகியவற்றை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை பரிசோதனை செய்ய வேண்டும்.
இதுதொடா்பாக தலைமை மனநல மருத்துவா், மனோதத்துவ நிபுணா், தலைமை நரம்பியல் வல்லுநா் ஆகியோா் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை இயக்குநா் அமைக்க வேண்டும். தேவையெனில், துரை தயாநிதியை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தும் பரிசோதிக்கலாம்.
பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவ அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் நீதிமன்றத்துக்கு நேரடியாக அனுப்ப வேண்டும். இந்தப் பரிசோதனைகளுக்கு துரை தயாநிதி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.