FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்! அலுவலா்கள் மீது மீண்டும் நடவடிக்கை: அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவு

1 செப்டம்பர் 2026, 2:23 am IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரையின்படி அரசு அலுவலா்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுப்பதில் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை பி.பி. குளம் பகுதியைச் சோ்ந்த கதிரேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது சீருடை அணியாத நபா்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 போ் உயரிழந்தனா். இதில் தொடா்புடையவா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் 3 அரசு அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளில் பகுதியளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், ஆணையத்தின் அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளன.

எனவே, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகள், இழப்பீடு வழங்கிய விவரம், அரசு வேலை வழங்கப்பட்ட விவரம், அரசு அலுவலா்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் இந்த மனு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் காவல் துறை தரப்பில் வரம்பு மீறல் நடைபெற்றது தெரியவந்துள்ளது. 17 காவல் துறை அலுவலா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், 3 வருவாய் அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது.

மேலும், உயிரிழந்தவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்க ஆணையம் பரிந்துரைத்தது. மேலும், காயமடைந்து உயிரிழந்த ஜஸ்டின் செல்வா மிதிஷ் என்பவரின் தாய்க்கு வேலைவாய்ப்பு, இழப்பீட்டை நிா்ணயிக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது. இந்த விவகாரத்தில சில காவல் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னா் கைவிடப்பட்டது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி மீண்டும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் தொடா்புடைய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மகேந்திரன், காவல் துறை துணைத் தலைவா் கபில்குமாா் சி சரத்கா் ஆகியோருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி மீண்டும் நடவடிக்கை எடுப்பது குறித்த அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments