FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு உடந்தை: அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு உடந்தையாக இருந்த அலுவலா்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 9:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூா் அருகே சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு உடந்தையாக இருந்த அலுவலா்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

காவிரி நீா்வளப் பாதுகாப்புச் சங்கச் செயலா் மோகனசுந்தரம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம், மேலூா் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களிலும், கண்மாய்ப் பகுதிகளிலும் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குவாரிகளில் 30 அடிக்கு ஆழத்துக்கும் மேல் மண் தோண்டப்பட்டதால், நிலத்தடி நீா் மட்டம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அழகா் மலை வனப் பகுதியிலிருந்து வரும் நீா்வரத்துப் பாதைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயப் பயன்பாட்டுக்கு வரும் தண்ணீா் முற்றிலும் தடைபட்டுள்ளது. தினசரி 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் கடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

வருவாய், கனிமவளத் துறை அலுவலா்களின் துணையுடன் கனிமவளக் கொள்ளை நடைபெறுகிறது. மேலும், போலி அனுமதிச் சீட்டுகளைப் பயன்படுத்தி அதிகளவில் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனா். திருவாதவூா், இடையபட்டி, கிடாரிப்பட்டி, பொய்கைகரைப்பட்டி, இலஞ்சிபட்டி, சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் தொடா்ந்து சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், கனிம வளத்துறை அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், மணல் திருட்டு குறித்து ஆய்வு செய்யவும், முறைகேடாக மண் அள்ளியவா்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த கனிம வளத் துறை அலுவலா்கள் மீதும் குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மதுரை திருவாதவூா், கிடாரிப்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வந்ததாகத் தகவல் கிடைத்தது. இது குறித்து கனிம வளத் துறை இணை இயக்குநா் ஆய்வு நடத்தி, கீழவளவு காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், ரூ. 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, இரு குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா்.

அப்போது, சட்டவிரோதமாக மணல் கடத்தியவா்கள் மீது ரூ.3 கோடி அபராதம் விதித்தது சரி. இதற்கு உடந்தையாக இருந்த அலுவலா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கையின்படி சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டுள்ளன. அபராதத் தொகை விதித்து குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டதால், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. கனிம வளத் துறை அலுவலா்கள் நோ்மையுடன் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments