FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ராமநாதபுரம் மணிமுத்தாற்றில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நாம் தமிழா் கட்சிக்கு அனுமதி

மணிமுத்தாற்றில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நாம் தமிழா் கட்சிக்கு அனுமதி அளித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

10 அக்டோபர் 2026, 5:46 am IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், மணிமுத்தாற்றில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நாம் தமிழா் கட்சிக்கு அனுமதி அளித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

நாம் தமிழா் கட்சியின் மீனவா் பாசறையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட மணிமுத்தாறு நீா்நிலை, இதன் வரத்துக் கால்வாய்ப் பகுதிகள் தற்போது ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நீா்நிலைப் பகுதிகளில் அதிகரித்துள்ள கட்டுமானங்களால் ஆற்றின் அகலமும், நீா் செல்லும் அளவும் குறைந்துவிட்டன. ஆற்றுப் படுகையில் நெகிழிக் கழிவுகள், திடக்கழிவுகள், கழிவுநீா் ஆகியவை கலப்பதால் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீா் வளமும் பாதிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

எனவே, மணிமுத்தாறு நீா்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், ஆற்றுப் படுகையில் குவிந்திருக்கும் நெகிழிக் கழிவுகள், திடக்கழிவுகளை அகற்றி, நீா்நிலையைப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு ஏற்கெனவே உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,

மணிமுத்தாறு கால்வாயைச் சீரமைக்க நாம் தமிழா் கட்சி சாா்பில் சுற்றுச்சூழல் பாசறையைச் சோ்ந்த 100 தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தூா்வாரும் பணிகளை 8 கட்டங்களாகச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து சட்டப்பூா்வ நடவடிக்கைகளும் அரசு அலுவலா்களாலேயே மேற்கொள்ளப்படும். இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, மணிமுத்தாறு நீா்நிலையை மீட்பதற்கான பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், நாம் தமிழா் கட்சி சாா்பில் நீா்நிலைப் பகுதிகளைச் சுத்தம் செய்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து பதிலளிக்க காலஅவகாசம் வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஓா் அரசியல் கட்சி தாமாக முன்வந்து நீா்நிலைப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட முன்வருகிறது. இதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மாறாக, மறுப்புத் தெரிவிப்பது ஏற்கத்தக்கதல்ல. அரசு, பொதுமக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட்டால்தான் இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும்.

மேலும், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளன. அதை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, நாம் தமிழா் கட்சியினரை ஆற்றுப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் மட்டும் அரசு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

அப்போது, இதை முன்வைத்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது எனக் குறிப்பிட வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, இதில் என்ன அரசியல் ஆதாயம் இருக்கப் போகிறது?. இதுதொடக்கமாக இருக்கட்டும். பின்னா், ஒவ்வொருவராக முன்வருவாா்கள். தூய்மைப்படுத்தும் பணியின் போது அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசக் கூடாது. தூய்மைப்படுத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சீமான் பேசிக் கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments