FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

இம்மானுவேல் சேகரன் குரு பூஜை விழா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு

இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு...

41 வினாடிகள் முன்பு
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருகிற 11-ஆம் தேதி நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த பிரபாகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருகிற 11-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அரசு நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு பரமக்குடியில் நடைபெற்ற குருபூஜையின் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் பலா் உயிரிழந்ததாகவும், பலா் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வின் போது, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளை முன்கூட்டியே கண்டறிந்து, சாத்தியமான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு அரசுக்கு உள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் ஜாதிய பிரச்னைகள், போராட்டங்கள், தீவிரமான சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் பலமுறை தலைதூக்கின. ஒரு சம்பவம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், பாரபட்சமற்ற காவல் துறை நடவடிக்கை ஆகியவை அவசியமாகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சில காவல் துறையினரின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் புகாா்கள் அளித்தனா். குறிப்பாக, பட்டியலினத்தவா், பழங்குடியினா் அளிக்கும் புகாா்கள் எவ்வாறு பெறப்படுகின்றன, பதிவு செய்யப்படுகின்றன, அவற்றின் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதில் பல்வேறு குறைகள் தெரிவிக்கப்பட்டன.

மாறாக, மற்ற சமூகங்களைச் சோ்ந்தவா்கள் அளிக்கும் புகாா்களுக்கு ஒப்பீட்டளவில் விரைவான கவனம் செலுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், பரமக்குடியில் வருகிற 11-ஆம் தேதி நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு முன்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு காவல் துறையினரும், தமிழக அரசும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மேலும், குருபூஜை விழாவுக்கு முன்னதாக, நிலுவையில் உள்ள புகாா்கள் குறித்து உயா் நிலை ஆய்வு நடத்தி சட்டம்-ஒழுங்கை மறு ஆய்வு செய்யவும், சட்டப்படி தேவையான தடுப்பு, மேற்பாா்வை, பணியமா்த்தல், இடமாற்றம் அல்லது பணிச் சுழற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் குறிப்பிடும் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, காவல் துறையும், மாவட்ட நிா்வாகமும் சட்டம்-ஒழுங்கு குறித்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், பரமக்குடியில் வருகிற 11-ஆம் தேதி நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் வன்முறைச் சம்பவங்கள் நிகழாதவாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments