காவல்துறையின் கெடுபிடியால் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி வசிப்போர் அவதி!
காவல்துறையின் கெடுபிடியால் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி வசிப்போர் அவதியைடந்துள்ளதைப் பற்றி...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி, காவல்துறையின் கடுமையான கெடுபிடி காரணமாக கோயிலைச் சுற்றி வசிக்கின்ற பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வியாழக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயிலில் நான்கு திசைகளும் அமைந்துள்ள ராஜகோபுரங்கள் உள்பட கோயிலுக்குள் அமைந்துள்ள 12 கோபுரங்கள் அம்மன், சுவாமி விமானங்கள் என அனைத்திற்கும் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பிலும் மதுரை மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல்துறை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள், ஆவணி வீதிகள், மாசி வீதிகள் அனைத்தும் மூடப்பட்டு போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
குறிப்பாக சித்திரை வீதிகளில் விஐபிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் அங்கு பொதுமக்கள் செல்ல முடியாது. அதேபோன்று ஆவணி மற்றும் மாசி வீதிகளில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆவணி மூல வீதியில் வசிக்கும் வெங்கடேசன் நம்மிடம் பேசும்போது, “நேற்று மாலையிலிருந்தே காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வாகனத்தில் வெளியே சென்றால் திரும்பவும் வீட்டுக்கு வருவதற்கு பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. உரிய ஆதாரங்களை காட்டித்தான் உள்ளே வர முடிகிறது.
பக்தர்களுக்கு பாதுகாப்பு மிக மிக அவசியம்தான். ஆனால், அதே சமயத்தில் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கு தடை விதிப்பது வேதனை அளிக்கிறது” என்றார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, “ லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிகின்ற இடத்தில் ஒரு சில அசெளகரியங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி வசிக்கின்ற பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இயன்றவரை செயல்பட்டு வருகிறோம். குடமுழக்கு நிகழ்வு முடிகின்ற வரை இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும். அதற்குப் பிறகு அவை தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது” என்றனர்.
Residents living around the Madurai Meenakshi Amman Temple are facing great hardship due to the police's stringent restrictions imposed in connection with the temple's consecration ceremony.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.