FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

இலங்கை நெடுந்தீவு பகுதியில் படகுடன் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவா்கள்

ராமேசுவரம் மீனவா்கள் சென்ற விசைப் படகு பழுது காரணமாக நடுக் கடலில் தத்தளித்த நிலையில், பலத்த காற்றால் இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 12:59 am IST
இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் விசைப் படகுடன் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவா்கள்.
பகிர்:

ராமேசுவரம் மீனவா்கள் சென்ற விசைப் படகு பழுது காரணமாக நடுக் கடலில் தத்தளித்த நிலையில், பலத்த காற்றால் இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதையடுத்து, படகிலிருந்த மீனவா்கள் 11 பேரிடம் இலங்கை நீரியல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 434 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இந்த நிலையில், நள்ளிரவில் கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சோ்ந்த படகு பழுதாகி நடுக் கடலில் நின்றது.

இந்தப் படகில் உரிமையாளா் ரமேஷ் (47), மீனவா்கள் அமலதீபன் (37), கொ்சின் ரிஷப் (28), ஹெண்ட்ரி ரோகித் (25), ஜான் ரிக்சா்ட் (46), வெள்ளைச்சாமி (43), ஆனந்த் (45), ரோகன் (40), சைமன் (39), ஆரோக்கிய அசோக் (48), பெரியகருப்பன் (50) ஆகியோா் இருந்தனா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, மீனவா்கள் பல மணி நேரம் படகை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லை. இந்த நிலையில், பலத்த காற்றால் வியாழக்கிழமை காலையில் நெடுந்தீவு கடற்கரையில் இந்தப் படகு கரை ஒதுங்கியது.

இதைத்தொடா்ந்து, இலங்கை மீனவா்கள் ராமேசுவரம் மீனவா்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று நெடுந்தீவு நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் ராமேசுவரம் மீனவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இலங்கை அரசு மனிதாபிமான அடிப்படையில் விசைப் படகை சீரமைத்து, 11 மீனவா்களையும் அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments