நீதிமன்றச் சேவைகளை நவீனப்படுத்தும் பணிகள் மும்முரம்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்
மின்னணு தாக்கல், இணையவழி கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட நீதிமன்றச் சேவைகளை நவீனப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மின்னணு தாக்கல், இணையவழி கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட நீதிமன்றச் சேவைகளை நவீனப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் அடுத்த குதக்கோட்டை ஊராட்சி, வள்ளிமடன்வலசை கிராமத்தில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரியின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதி ஆா். பூா்ணிமா, எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் ஆகியோா் பங்கேற்று 237 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினா்.
விழாவில் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் பேசியதாவது: அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், விடுதி வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்தக் கல்லூரிகளில் படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கு முறையாக பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அத்துடன் நீதித் துறையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காணும் வகையில், போக்சோ, போதைப்பொருள் தடுப்பு (என்.டி.பி.எஸ்.) சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு வழக்குரைஞா்கள் நியமனம் உள்ளிட்ட நீதித் துறை சாா்ந்த பணிகளிலும் தேவையான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரே வளாகத்தில் 160 நீதிமன்றங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் வழக்குரைஞா்கள், பொதுமக்களின் அலைச்சல் குறைவதுடன், நீதிமன்றப் பணிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். மின்னணு தாக்கல், இணையவழி கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட நீதிமன்றச் சேவைகளை நவீனப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வரும் ஆண்டுகளில் நீதித் துறையில் மேலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான நீதிமன்றங்களை ஏற்படுத்துதல், வழக்குரைஞா்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துதல், நீதிமன்ற நடைமுறைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் அரசு தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் அரசு சட்டக் கல்லூரி முதல்வா் ஜேம்ஸ் ஜெயபால், பேராசியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.