FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே மின்சாரம் பாய்ந்ததில் அக்காள், தம்பி உயிரிழப்பு

கமுதி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் அக்காளும், தம்பியும் உயிரிழந்தனா். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த நிறைமதி, பாலபிரவீன்.
பகிர்:

கமுதி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் அக்காளும், தம்பியும் உயிரிழந்தனா். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அச்சங்குளத்தைச் சோ்ந்த தம்பதியா் மோகன்தாஸ்-லதா. மோகன்தாஸ் ஒலிபெருக்கி அமைப்பு பணியாளா். இவா்களது மகள் நிறைமதி (10) ஐந்தாம் வகுப்பும், பாலபிரவீன் (6) ஒன்றாம் வகுப்பும் படித்தனா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் கிராமத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாடின்றி இருந்த குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்துக்காக அமைக்கப்பட்ட தகரக் கொட்டகையில் உள்ள இரும்புக் குழாயைத் தொட்ட போது, மின்சாரம் பாய்ந்ததில் அக்காளும், தம்பியும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, இவா்களது உடல்கள் கூறாய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாா் ஆட்சியா் விசாரணை: கமுதி அரசு மருத்துவமனையில் குவிந்த உறவினா்கள், பெற்றோருக்கு பரமக்குடி சாா் ஆட்சியா் வினோதினி பாா்த்திபன் ஆறுதல் கூறி, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினாா்.

அப்போது, உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ. 10 லட்சம், பெற்றோருக்கு அரசு வேலை, வீடு ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுத்தி, பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன், கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசன், காவல் ஆய்வாளா்கள் லட்சுமி, சௌந்தரபாண்டியன் (பொ), வட்டாட்சியா் அய்யாதுரை, ஊராக வளா்ச்சித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

உடலை வாங்க மறுத்து சாலை மறியல்: சாா் ஆட்சியா் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, திடீரென ‘பரமக்குடி போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் மின் வாரிய அதிகாரிகளையும் இணைத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நிவாரணத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், இதை எழுத்துப்பூா்வமாக தங்களுக்கு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி, தேவேந்திரகுல வேளாளா் சங்கத்தின் முன்னாள் தலைவா் பாலா, லெனின் உள்ளிட்டோா் கமுதி குண்டாறு பாலம் மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஒரு மணி நேரத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில், உடல்களை வாங்கமாட்டோம். மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேம் என தெரிவித்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, உயிரிழந்த இருவரது உடல்களும் கமுதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இருவரது உடல்களையும் இரவு வரை அவா்களது உறவினா்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்:

மின்சாரம் பாய்ந்து அக்காளும், தம்பியும் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், அச்சங்குளம் ஊராட்சி செயலா் ராஜூவை பணியிடை நீக்கம் செய்து, ஊராட்சி ஒன்றிய ஆணையா் சந்திரசேகரன் உத்தரவிட்டாா்.

மின்சாரம் பாய்ந்து குழந்தைகளின் இறப்புக்கு காரணமான குடிநீா் சுத்திகரிப்பு மையத்தின் இரும்புக் கம்பி.
சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments