FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

40 ஆண்டுகளாக பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

40 ஆண்டுகளாக லட்சுமி அம்மாள் தயார் செய்யும் இந்த நோன்பு கஞ்சிக்கு பெரும் வரவேற்பு!

Updated On : 30 மார்ச் 2025, 11:23 am IST
சிவகங்கை நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள லட்சுமி அம்மாள்.
பகிர்:

சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சுமி அம்மாள்.

சிவகங்கை நகரில் நேரு பஜாரில் 100 ஆண்டுகள் பழமையான வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளது. சிவகங்கை மாவட்டத்திலேயே பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் இஸ்லாமியர்கள் அதிக வசிக்கும் பகுதியில் உள்ளது.

இந்தப் பள்ளிவாசலில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் தினமும் நோன்பு கஞ்சி சமைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி, நேரு பஜார் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தவர்கள் உள்பட தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

இந்த நோன்பு கஞ்சியை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் சமைத்து வருகிறார். இப்பணியில் அவரது உறவினர்கள் உள்பட கிராமத்தை சேர்ந்த பெண்களும் தினமும் சிவகங்கைக்கு வந்து இந்த பணியில் உதவியாக இருந்து வருகின்றனர்.

காலை 8 மணிக்கு தொடங்கக்கூடிய இவர்களின் சமையல் பணி, மதியம் 12.30 மணிக்கு நிறைவடையும். பின்னர் மதியம் 1 மணியிலிருந்து இந்த நோன்பு கஞ்சி மக்களுக்கு சுடச்சுட விநியோகம் செய்கின்றனர்.

தினசரி 50 படி அரிசியில் இந்த நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு ரூ. 40 ஆயிரம் வரை இந்த பள்ளிவாசலை சேர்ந்த இஸ்லாமியர்கள் செலவிடுகின்றனர். மற்ற பள்ளிவாசல்களில் இல்லாத வகையில், இங்கு கமகமக்கும் நோன்பு கஞ்சியுடன் வழங்கப்படும் கத்தரிக்காய் சட்னி மிகவும் பிரபலமானது. லட்சுமி அம்மாள் தயார் செய்யும் இந்த நோன்பு கஞ்சி மற்றும் கத்தரிக்காய் சட்னியை ரமலான் மாதத்தில் விரும்பி சாப்பிடக் கூடிய நூற்றுக்கணக்கானோர் அந்தப் பகுதியில் உள்ளனர்.

இந்த நோன்பு கஞ்சி, கத்தரிக்காய் சட்னி ரமலான் மாதத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இதை ருசிப்பதற்காக வெளிநாடுகளில், வெளியூர்களில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு வைப்பதற்காக சிவகங்கைக்கு வரும் நிலையில், லட்சுமி அம்மாள் கைப்பக்குவத்தில் தயார் செய்யும் இந்த நோன்பு கஞ்சியை விரும்பி சாப்பிடுவது கூடுதல் சிறப்பு.

இது குறித்து லட்சுமி அம்மாள் கூறுகையில், “தொடக்க காலத்தில் 5 ரூபாய் சம்பளத்திற்கு இந்த பள்ளிவாசலில் முதன்முதலில் சமைக்க வந்தேன். 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த பணியினை எனது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுடன் சேர்ந்து செய்கிறோம். இந்த ஒரு மாத காலம் இந்தப் பணியைச் செய்வதால் கிடைக்கும் சம்பளத்தைவிட, எங்களுக்கு கிடைக்கும் மன நிறைவு அதிகம். ஒரே குடும்பம் போல் இந்த பள்ளிவாசலில் நாங்கள் தங்கி இந்த பணியை செய்து வருகிறோம்” என்றார்.

இது குறித்து ஜமாஅத் தலைவர் கூறியதாவது: ”லட்சுமி அம்மாள் மற்றும் அவருடன் சமைப்பவர்கள் அனைவருக்கும் சம்பளம் பிரதான நோக்கமாக இல்லாமல், ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பவர்களுக்கு இந்த நோன்பு கஞ்சியை ருசியான முறையில் தயார் செய்து கொடுப்பதையே முக்கியப் பணியாகக் கருதுகின்றனர். பல ஆண்டுகளாக ஒரே குடும்பம் போல் இங்கு இந்தப் பணியை செய்து வருகின்றனர்” என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments