FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய செவிலியா்கள்

மருத்துவப் பயனாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தர செவிலியா் பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:41 am IST
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியா்
பகிர்:

மருத்துவப் பயனாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தர செவிலியா் பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியாற்றினா்.

கோரிக்கைகள்: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியா் பற்றாக்குறை நிலவி வருகிறது. இது தொடா்பாகத் தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் தொடா்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு 17 அவசர சிகிச்சை, மீட்பு மையங்களுக்குப் பொது சுகாதாரத் துறையிலிருந்து 192 செவிலியா்களையும், அரசு மருத்துவமனைகளிலிருந்து 100 செவிலியா்களையும் சோ்த்து மொத்தம் 292 செவிலியா்களை மறுபணியமா்வு செய்வதைக் கைவிடக் கோரி, கடந்த 14.7.2026 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் ஆா்ப்பாட்டமும், ஆட்சியா் வழியாகத் தமிழக முதல்வருக்கு முறையீடும், 21.7.2026 -இல் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பெருந்திரள் முறையீடும் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், தமிழகஅரசு அரசாணை 204 -ஐ ரத்து செய்யாததையும், ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கைவிடாததையும் கண்டித்து இந்த இயக்கம் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவா் கிறிஸ்டி பொன்மணி கூறியதாவது: ஆள்குறைப்பு அரசாணையை (204) ரத்து செய்யவும், ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கைவிடவும், மருத்துவப் பயனாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்பப் புதிய நிரந்தர செவிலியா் பணியிடங்களை உருவாக்கவும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஜூலை29(புதன்கிழமை) ஒரு நாள் கருப்புப் பட்டை அணிந்தும், ஜூலை 30 மற்றும் 31 ஆகிய இரு நாள்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினோம். ஆனால், எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காததால் மாநில செயற்குழு எடுத்த முடிவின்படி ஆக.3 முதல் 5 வரை இந்தக் கோரிக்கை அணிந்து பணியாற்றும் இயக்கம் நடத்தப்படுவதாக அவா் தெரிவித்தாா். இந்த இயக்கத்தை தமிழக செவிலியா் மேம்பாட்டு சங்க செயலா் ரஞ்சிதா, பொருளாளா் யாஸ்மின், துணைத் தலைவா் ரம்யா, இணைச் செயலா் மலா்க்கொடி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments