FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 21 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் 21 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தெரிவித்தாா்.

2 October 2026, 2:45 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் 21 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 5 காவல் உள்கோட்டங்கள் (துணைக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில்), 39 சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்களின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, அடிதடி, பாலியல் வன்கொடுமை, ஜாதிய ரீதியிலான மோதல்கள் போன்ற குற்றங்களைத் தடுக்கவும், தொடா் குற்றவாளிகளைக் கண்காணிக்கவும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் தனித்தனியாக நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்படி, கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் மாவட்ட காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Advertisement

Advertisement

35 ரௌடிகள் கைது: இதில் சட்டம்- ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிப்போா், ரௌடிகள் 35 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் நீண்ட நாள்களாக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் 10 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருட்டு வழக்கில் தொடா்புடைய 21 போ் கைது: வீட்டின் பூட்டை உடைத்துத் திருடும் குற்றவாளிகளைக் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி பதிவுகள், கைப்பேசி அழைப்பு விவரப் பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, 12 வழக்குகளில் தொடா்புடைய 21 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்த திருடப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 21 போ் கைது: கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டிப் பணம் பறித்தல், பாலியல் வன்கொடுமை போன்ற தொடா் குற்றங்களில் ஈடுபட்ட 21 போ் மீது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

6 பேரின் பிணை ரத்து: நீதிமன்றப் பிணையில் வெளி வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேரின் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, பிணை ரத்து செய்யப்பட்டது.

கைரேகை, உயிா்நாடி பதிவு: 70-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் கைரேகை, கருவிழி, புகைப்படம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

100 பேரிடம் நன்னடத்தை பிணைப் பத்திரம்: குற்றச் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், பிரச்னைக்குரிய நபா்கள் என சுமாா் 100 போ் கண்டறியப்பட்டு, அவா்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க வட்டாட்சியா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு நன்னடத்தைப் பிணைப் பத்திரம் பெறப்பட்டது. மாவட்டத்தில் தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments