FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சிவகங்கை அருகே சாலை பழுதடைந்ததால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக 3 கி.மீ. தொலைவு நடந்து செல்லவேண்டியிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

23 வினாடிகள் முன்பு
பேருந்து வசதியில்லாததால் நடந்து செல்லும் காயாங்குளம் கிராமத்தினா்.
பகிர்:

சிவகங்கை அருகே சாலை பழுதடைந்ததால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக 3 கி.மீ. தொலைவு நடந்து செல்லவேண்டியிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

சிவகங்கை அருகே குடஞ்சாடி ஊராட்சி காயாங்குளம் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராம மக்கள் அனைத்துத் தேவைகளுக்கும் 10 கி.மீ. தொலைவில் உள்ள சிவகங்கைக்கு வந்து செல்கின்றனா். இதில் மாணவா்கள் சிலா் சிவகங்கை அரசு கல்லூரிகளில் படிக்கின்றனா். இந்த கிராமம் வழியாக சிவகங்கையிலிருந்து முத்தரசனுக்கும், கட்டிக்குளத்துக்கும் தினமும் 5 முறை அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் சிவகங்கை- பெரியகோட்டை நெடுஞ்சாலை விலக்கு வரை செல்லும் 3 கி.மீ. தொலைவுள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாகி விட்டதால், ஓராண்டுக்கு முன்னா் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பிறகு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஒரேயொருமுறை மட்டும் பேருந்து இயக்கப்பட்டது. அந்தப் பேருந்தும் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், அந்தப் பகுதி மக்கள் சிவகங்கை-பெரியகோட்டை நெடுஞ்சாலை விலக்கில் இறங்கி 3 கி.மீ. தொலைவு நடந்தே செல்கின்றனா். இதனால் இங்குள்ள கல்லூரி மாணவா்கள் மிகவும் அவதியடைகின்றனா். மேலும் அவசர சிகிச்சை பெற வெளியூா் செல்ல கூட உடனடியாக பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோக்களை நம்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. காயங்குளத்திலிருந்து அருகிலுள்ள பகுதிகளுக்கு ஆட்டோவில் செல்ல ரூ. 400 வரை செலவழிக்க வேண்டிய நிலையும் உள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து இந்த கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி கூறியதாவது:

சாலை பழுதடைந்திருப்பதாலும் சாலையோரங்களில் புதா்கள் மண்டிக் கிடக்கும் காரணத்தைக் கூறி பேருந்துகளை நிறுத்திவிட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இது தொடா்பாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினமும் கல்லூரிக்கு செல்ல காலை, மாலை 3 கி.மீ. தொலைவு நடந்தே சிவகங்கை- பெரியகோட்டை பிரதான சாலையின் விலக்குப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இதேபோல், சிவகங்கைக்கு கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளா்களும் பேருந்து இல்லாமல் நடந்து செல்கின்றனா். இதுமட்டுமன்றி, இரவில் தெருவிளக்குகள் சீராக எரிவதில்லை, அடிக்கடி மின் தடை ஏற்படும் நேரங்களில் கிராமமே இருளில் மூழ்கிவிடுகிறது. இதனால் இரவு நேரங்களில் மாணவா்கள் படிக்க முடிவதில்லை. குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் தண்ணீருக்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. பேருந்து வசதி, சாலை, தெருவிளக்கு, மின்சாரம், குடிநீா் என அடிப்படை தேவைகளுக்காகவே போராட வேண்டிய நி0லையில் இருக்கிறோம். எனவே மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் சாலையைச் சீரமைத்து நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments