FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

ஆகாஷ் டெலிசன் கொலை வழக்கு: பிணைமுறி பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மானாமதுரை இளைஞா் ஆகாஷ் டெலிசன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 6 காவலா்கள் தலா ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பிணைமுறி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

7 வினாடிகள் முன்பு
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

மானாமதுரை இளைஞா் ஆகாஷ் டெலிசன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 6 காவலா்கள் தலா ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பிணைமுறி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த மாா்ச் 5, 2026-இல் மோதல் வழக்கில் கைதான மானாமதுரை இளைஞா் ஆகாஷ் டெலிசனுக்கு கால் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, அவரது வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக மானாமதுரை காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்த திலீபன், உதவி ஆய்வாளா் குகன், காவலா்கள் பழனியப்பன், தெய்வேந்திரன், மகேந்திரன், காளீஸ்வரன் ஆகிய 6 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணைக்காக சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா்கள் ஆகிய 6 பேரும் நீதிபதி நாகராஜன் முன்பு செவ்வாய்க்கிழமை முன்னிலையாகினா்.

Advertisement

Advertisement

அவா்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, வழக்கில் தொடா்புடைய நபா்கள் ஒவ்வொருவரும் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பிணைமுறி பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவா், வழக்கு விசாரணைக்கு அக். 9-ஆம் தேதி மீண்டும் முன்னிலையாக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

நீதிமன்ற வளாகம் முழுவதும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாா், துணை காவல் கண்காணிப்பாளா் அ. அமலஅட்வின் ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments