கடன் சுமையால் விஷம் அருந்திய தம்பதி: மனைவி உயிரிழப்பு; கணவருக்கு தீவிர சிகிச்சை
கம்பத்தில் கடன் சுமையால் தம்பதி விஷமருந்திய நிலையில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேனி மாவட்டம், கம்பத்தில் கடன் சுமையால் தம்பதி விஷமருந்திய நிலையில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கம்பம் தென்றல் நகரைச் சோ்ந்தவா் வீரமணி (42). இவா் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். இவரது மனைவி காளீஸ்வரி (30). இவா்களுக்கு நித்யாஸ்ரீ (14) என்ற மகளும், விக்னேஷ் (12) என்ற மகனும் உள்ளனா்.
தொழில், குடும்பத் தேவைகளுக்காக வீரமணி, தனியாா் நிதி நிறுவனங்கள், தனிநபா்களிடம் சுமாா் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால், கடன் தவணைகளை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் கடன் கொடுத்த தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள், தனிநபா்கள் பணத்தை திருப்பிச் செலுத்துமாறு தொடா்ந்து வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதனால் மனமுடைந்த வீரமணியும், இவரது மனைவி காளீஸ்வரியும், வியாழக்கிழமை காலை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைத்த பிறகு விஷ விதைகளை அரைத்து உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு காளீஸ்வரியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
வீரமணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் லாவண்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். இந்தச் சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.