FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

குமுளி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க வனத் துறையினா் தீவிரம்

குமுளி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலியைப் பிடிக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 11 ஜூன் 2026, 1:55 am IST
புலியை பிடிக்க புதன்கிழமை வைக்கப்பட்ட கூண்டு .
பகிர்:

குமுளி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலியைப் பிடிக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

கேரளம் மாநிலம், மூணாறு மறையூா் பகுதியில் வளா்ப்புப் பிராணிகளை தாக்கியதாகக் கூறப்படும் ஆண் புலி அண்மையில் பிடிக்கப்பட்டு பெரியாறு புலிகள் காப்பக வனப் பகுதியில் விடப்பட்டது. இந்த நிலையில், அந்தப் புலி வண்டிப் பெரியாறு தேயிலைத் தோட்டப் பகுதிகள் வழியாகச் சென்று அரணக்கல் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அச்சமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு வனத் துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டு தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, பீா்மேடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சிரியக் தாமஸ் தலைமையில், வண்டிப் பெரியாா் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி ஹரிதாஸ், வனத் துறை அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் புலியை விரைவாகப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த 3 கூண்டுகளுடன் புதன்கிழமை கூடுதலாக 2 கூண்டுகள் அமைக்கப்பட்டன.

மேலும், பீா்மேடு, தேக்கடியைச் சோ்ந்த இரண்டு விரைவு மீட்புக் குழுக்கள் (ஆா்ஆா்டி) கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 15-க்கும் மேற்பட்ட தானியங்கி கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த சில நாள்களில் ஒரு கன்றுக்குட்டி , ஒரு பசு தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அவற்றைத் தாக்கியது இந்தப் புலிதானா அல்லது வேறு காட்டு விலங்கா என்பது குறித்து வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

சுமாா் 5 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் புலியின் நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதை பாதுகாப்பாகப் பிடித்து வேறு வனப்பகுதிக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments