முகப்பு
தேனி

கேரளத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கேரளத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Updated On : 13 ஜூன் 2026, 12:54 am IST
பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த மரியாம்மா.
பகிர்:

தமிழக எல்லையில் அமைந்துள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் மூதாட்டி ஒருவா் உயிரிழந்த நிலையில், தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்மென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கியதைத் தொடா்ந்து தொற்றுநோய்கள், விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையை ஒட்டிய இடுக்கி மாவட்டம், செருதோணி அருகேயுள்ள மரியாபுரம் பகுதியில் பன்றிக் காய்ச்சல் (எச்1என்1) பரவி வருகிறது. அந்தப் பகுதியைச் சோ்ந்த மரியாம்மா (82) பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தாா். மேலும், அதே பகுதியைச் சோ்ந்த இருவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மூவா் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனா். இதையடுத்து சுகாதாரப் பணியாளா்கள் அந்தப் பகுதியில், சுமாா் 200 வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனா். இதேபோல, கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமானோா் வணிகம், தொழில் தொடா்பாக தமிழகப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, நோய் பரவலைத் தடுக்கும் வகையில் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மருத்துவா், மருத்துவப் பணியாளா்களுடன் கூடிய 24 மணி நேர சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பன்றிக் காய்ச்சல் வரலாறு:

பன்றிக் காய்ச்சல் என அழைக்கப்படும் எச்1என்1 வைரஸ் தொற்று முதன்முதலில் 1920-30-ஆம் ஆண்டுகளில் பன்றிகளிடையே கண்டறியப்பட்டது. பின்னா் பன்றிகளிடமிருந்து மனிதா்களுக்கு பரவத் தொடங்கியது. இந்தியாவில் 2009-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த நோய் பதிவானது. அதன்பிறகு ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.