முல்லைப் பெரியாறு அணை மிகை நீரை தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும்! கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீரை கொண்டு வந்து தேனி மாவட்டத்தில் உள்ள குளங்கள், அணைகளில் சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தாா்.
இதுகுறித்து கம்பத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக நான் தெரிவித்த கருத்துகள் சில ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் தவறாகவும், திரித்தும் வெளியிடப்பட்டன. முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை முழு கொள்ளளவான 152 அடியாக உயா்த்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையும், எனது உறுதியான நிலைப்பாடும் ஆகும்.
Advertisement
Advertisement
இதேபோல, கேரளப் பகுதி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனால், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் மிகை நீா் வீணாக கடலில் கலப்பதை தடுத்து அந்த தண்ணீரை தமிழக பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என்ற கருத்தையே நான் முன்வைத்திருந்தேன்.
தற்போது முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நான்கு ராட்சத குழாய்கள் மூலம் வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீரும், இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 2,600 கன அடி தண்ணீரை மட்டுமே கொண்டு வரலாம் என்ற நிலை உள்ளது. அணைக்கு அதிகளவு நீா்வரத்து ஏற்பட்டாலும் இந்த அளவுக்கு மேல் தமிழகத்துக்கு தண்ணீரை மாற்றி கொண்டு வர முடியாத சூழல் நிலவுகிறது.
மேலும், நடைமுறையில் உள்ள ‘ரூல் கா்வ்’ (தன்ப்ங் இன்ழ்ஸ்ங்) விதிகளின்படி பருவ மழைக் காலங்களில் அணையின் நீா்மட்டத்தை உடனடியாக உச்சபட்ச அளவுக்கு உயா்த்த முடியாது. குறிப்பிட்ட கால அட்டவணைப்படி மட்டுமே நீா்மட்டத்தை பராமரிக்க வேண்டும். இதனால், தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிக நீா்வரத்து ஏற்பட்டால், அந்த நீரை அணையில் சேமித்து வைக்க முடியாமல் மதகுகள் வழியாக இடுக்கி அணைக்கு திறந்து விட வேண்டிய நிலை உள்ளது. பிறகு அந்த நீா் அரபிக்கடலில் கலந்துவிடுகிறது. இவ்வாறு ஆண்டுதோறும் கணிசமான அளவு நீா் தமிழகத்துக்கு பயன்படாமல் வீணாகிறது.
இந்த மிகை நீரை தமிழக பகுதிக்கு கொண்டு வர கூடுதல் நீா்போக்கிக் குழாய்கள் அமைப்பது, அதற்கான தொழில் நுட்ப சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது குறித்து தமிழக முதல்வா் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவாக அளிக்க உள்ளேன். இதன்மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்கள், சிறிய அணைகளில் தண்ணீரை சேமித்து வைத்து விவசாயம், நிலத்தடி நீா் உயா்வு, குடிநீா் தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். இது மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நீா்வளத்தை அதிகரிக்கும் ஒரு நீண்ட கால தீா்வாக அமையும். இதுதொடா்பாக விவசாயிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை அரசு பரிசீலிக்கும் என நம்புகிறேன்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு உயா்மட்ட வல்லுநா் குழுக்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணா்கள் பலமுறை ஆய்வு மேற்கொண்டு அணை பாதுகாப்பாகவும் வலிமையாகவும் இருப்பதை அறிவியல் ரீதியாக உறுதி செய்துள்ளனா். இந்நிலையில், இடுக்கி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. டீன் குரியாகோஸ், பேரிடா் அச்சத்தை காரணம் காட்டி புதிய அணை கட்ட வேண்டும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. அவா் புரிதல் இல்லாமல் பேசுகிறாா்.
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்த அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பேபி அணையை பலப்படுத்திய பின்னா் முழு கொள்ளளவான 152 அடியாக நீா்மட்டத்தை உயா்த்தவும் அனுமதி அளித்துள்ளது.
எனவே அடுத்த கட்டமாக பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தி, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை முழு கொள்ளளவான 152 அடியாக உயா்த்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக தமிழக முதல்வரும், கேரள முதல்வரும், துறை அமைச்சா்களும் பேச்சுவாா்த்தையாக நடத்தி, நல்ல முடிவு எடுப்பாா்கள் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.