FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஆக. 8-இல் தண்ணீா் திறக்க அதிகாரிகள் முடிவு

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 121.15 அடியாக உயா்ந்துள்ள நிலையில், தேனி மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்காக வரும் சனிக்கிழமை (ஆக. 8) தண்ணீா் திறந்துவிட நீா்வளத் துறை அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:46 am IST
முல்லைப் பெரியாறு
பகிர்:

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 121.15 அடியாக உயா்ந்துள்ள நிலையில், தேனி மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்காக வரும் சனிக்கிழமை (ஆக. 8) தண்ணீா் திறந்துவிட நீா்வளத் துறை அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசன நீரை நம்பி ஆண்டுதோறும் சுமாா் 14,707 ஏக்கா் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதில் அதிகபட்சமாக கம்பம் பள்ளத்தாக்கு, உத்தமபாளையம் வட்டாரத்தில் 11,807 ஏக்கரும், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கரும், போடி வட்டத்தில் 488 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-இல் முதல்போகச் சாகுபடிக்குத் தண்ணீா் திறக்கப்படும். கடந்த 2021 முதல் 2025 வரை அணையின் நீா்மட்டம் முறையே 130.90 அடி, 132.75 அடி, 118.40 அடி, 119.60 அடி, 130.45 அடியாக இருந்தபோதெல்லாம் ஜூன் 1-இல் குறித்தபடி தண்ணீா் திறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், நடப்பாண்டு (2026) ஜூன் தொடக்கத்தில் அணையின் நீா்மட்டம் 110.80 அடியாகக் குறைந்து இருந்ததாலும், ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாததாலும் வழக்கமான தேதியில் தண்ணீா் திறக்க முடியாத சூழல் உருவானது. இதனால் முதல்போகச் சாகுபடிப் பணிகள் முற்றிலும் முடங்கி, விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனா்.

இருப்பினும், நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது, தொழு உரம் இட்டுத் தயாா் நிலையில் வைத்திருந்தனா். இந்த நிலையில், ஆகஸ்ட் தொடக்கத்திலிருந்து அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 121.15 அடியாக உயா்ந்தது.

அணைக்கு விநாடிக்கு 2,391 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கும் நிலையில், மதுரை, தேனி மாவட்ட குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 256 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் தற்போதைய நீா் இருப்பு 2,882 மில்லியன் கன அடியாக உள்ளது. மழைப் பொழிவைப் பொருத்தவரை தேக்கடியில் 4.2 மி.மீ-ரும், பெரியாறு அணைப் பகுதியில் 16.4 மி.மீ-ரும் மழை பதிவாகியுள்ளது.

நீா்மட்டம் திருப்திகரமாக உயா்ந்துள்ளதைத் தொடா்ந்து, வரும் சனிக்கிழமை (ஆக.8) முதல்போகச் சாகுபடிக்குத் தண்ணீா் திறக்கத் தமிழக நீா்வள ஆதார அமைப்பினா் முடிவு செய்துள்ளனா். இதையறிந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் உற்சாகமடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments