FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம்

Updated On : 1 ஜூன் 2026, 2:33 am IST
நெல் - (கோப்புப் படம்)
பகிர்:

தேனி மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை பாசனத்தை நம்பி 14,707 ஏக்கா் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் கம்பம் பள்ளத்தாக்கு, உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கா், போடி வட்டத்தில் 488 ஏக்கா், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கா் நிலங்கள் அடங்கும்.

ஆண்டுதோறும் முதல்போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளில் 2021-ஆம் ஆண்டு அணையின் நீா்மட்டம் 130.90 அடியாக இருந்தபோது, ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இதேபோல, கடந்த 2022-இல் 132.75 அடி, 2023-இல் 118.40 அடி, 2024-இல் 119.60 அடி, 2025-இல் 130.45 அடி நீா்மட்டம் இருந்த நிலையிலும் முதல்போக சாகுபடிக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழாண்டு மே மாதத் தொடக்கத்தில் அணையின் நீா்மட்டம் 110.05 அடியாக இருந்தது. கடந்த 31 நாள்களில் 12 நாள்கள் மட்டுமே அணைப் பகுதியில் மழை பெய்தது. மொத்தம் 113.2 மி.மீ. மழை பதிவானதால் அணை நீா்மட்டம் அதிகபட்சமாக 111.70 அடி மட்டுமே உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 110.90 அடியாக உள்ளது.

பொதுவாக மே மாதத்தில் குடிநீா்த் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீா் திறக்கப்படும். ஆனால், நிகழாண்டு மே மாதத் தொடக்கம் முதலே வினாடிக்கு 240 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. பின்னா் இது 300 கனஅடியாகவும், தற்போது 350 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது.

அப்போதே முதல்போக சாகுபடிக்காக ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டியிருப்பதால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கும் பொதுப்பணித் துறைக்கும் கோரிக்கை விடுத்தனா். எனினும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல்போக சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு வரை முதல்போக சாகுபடிக்காக தண்ணீா் திறக்க அரசு சாா்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால், கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பாசனப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கவலையடைந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வைகை அணையின் நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால், அணைக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் வகையில், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 350 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சில நாள்களில் மழை பெய்தால், அணையின் நீா்மட்டம் வேகமாக உயரும். இதன் பின்னா், முதல்போக சாகுபடிக்காக தண்ணீா் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்‘ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments