FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவலர் தேர்வில் பங்குபெறுவோருக்கு இலவச பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு: ஆட்சியர் தகவல்

புதுச்சேரி மாநில காவலர் தேர்வில் பங்குபெறுவோருக்கு இலவசமாக பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

புதுச்சேரி மாநில காவலர் தேர்வில் பங்குபெறுவோருக்கு இலவசமாக பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது :
புதுச்சேரியில் 390 காவலர்களை புதிதாக தேர்வு செய்வதற்காக, கடந்த 23-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்திலிருந்து அதிகமான இளைஞர்கள் காவல்துறை நடத்தும் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வில் பங்குபெற வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகத்தின் எண்ணம். காரைக்கால் மாவட்ட இளைஞர்கள் தேர்வில் நல்ல தகுதியுடன் பங்கேற்கும் வகையில் உரிய பயிற்சிகள் அளிக்க வேளாண் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காரைக்காலில் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவோடு நடத்தப்படும் பயிற்சி மையத்தின் மூலம் வங்கி போட்டித் தேர்வு, மத்திய தேர்வாணையம் தொடர்பான தேர்வுகளில் பங்குபெறுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுவதில் திரளானோர் பங்கேற்று வருகின்றனர்.
காவல்துறையில் காவலர் தேர்வுக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக காரைக்கால் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு உடல் தகுதிக்கான பயிற்சி தரவும், பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு இளைஞர்களுக்கு எழுத்துத் தேர்வில் பங்குகொள்ளும் தகுதியை உருவாக்கும் முயற்சியையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
இதற்கு பள்ளி ஆசிரியர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் தன்னார்வலராக கலந்துகொண்டு பயிற்சி தர முன்வந்துள்ளனர். இந்த வாய்ப்பை காரைக்கால் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து கொம்யூன்களிலும், காரைக்கால் நகரப் பகுதியிலும் இதற்கான பயிற்சி தரப்படவுள்ளது. தேர்வு நடைபெறும் காலத்துக்கு முன்பாக காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில், இந்த பயிற்சியில் ஈடுபட்டோர் அனைவருக்கும் கூட்டுப் பயிற்சி தரப்படும். ஆன்லைன் மூலம் காவலர் பணிக்கு விண்ணப்பிப்போருக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், அதை தீர்வு செய்யும் விதத்தில் ஆட்சியரகத்தில் சிறப்பு மையம் செயல்படுவதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த காவல் தேர்வில் சுமார் 100 மகளிரும் தேர்வு செய்யப்பட இருப்பதால், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மகளிரும் இந்த பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளலாம். காலையில் ஆசிரியர்களைக்கொண்டு எழுத்துத் தேர்வுக்கான பயிற்சியும், மாலையில் உடல் தகுதிக்கான பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி நடைபெறுமிடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் விரைவாக வெளியிடப்படும். அடுத்த வாரத்திலிருந்து பயிற்சிகள் தொடங்கும் என்றார் ஆட்சியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments