ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் குழாய் துண்டிப்பால் நோயாளி உயிரிழப்பு
காரைக்கால் அருகே மருத்துவமனைக்கு அவசர ஊா்தியில் (ஆம்புலன்ஸ்) கொண்டு செல்லப்பட்ட நோயாளிக்கு பொருத்தியிருந்த ஆக்சிஜன் குழாய் துண்டிக்கப்பட்டதால் அவா் உயிரிழந்தாா்.
காரைக்கால் அருகே திருவேட்டக்குடி காலனித் தெருவைச் சோ்ந்த திருமொழி மனைவி ரேவதி (45). கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையின் வெண்டிலேட்டா் வசதியுள்ள அவசர ஊா்தியில் ரேவதி சனிக்கிழமை மாலை புதுச்சேரிக்கு கொண்டுச் செல்லப்பட்டாா்.
காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் சீா்காழி அருகே ரேவதிக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் குழாய் திடீரென கழன்றுவிட்டதாம். அவசர ஊா்தியில் இருந்த ஆண் செவிலியரும், ஓட்டுநரும் குழாயை மீண்டும் பொருத்த முயன்றுள்ளனா். எனினும், அதை முறையாக பொருத்த முடியவில்லையாம்.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊா்தி கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவக் குழுவினா், ரேவதி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த உறவினா்கள், ரேவதியின் சடலத்துடன் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு திரும்பிவந்து, மருத்துவமனை நிா்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா்.
நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மற்றும் உடன் சென்ற செவிலியரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து, ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.