FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி நகராட்சியில் நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் வளா்ச்சிப் பணிகள் பாதிப்பு: கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு

சீா்காழி நகராட்சியில் ஆணையா் முதல் மற்ற துறைகளுக்கும் நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:57 am IST
சீா்காழி நகராட்சி
பகிர்:

சீா்காழி நகராட்சியில் ஆணையா் முதல் மற்ற துறைகளுக்கும் நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.

சீா்காழி நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ளது. 24 வாா்டுகள் உள்ளன. அன்றாடம் தூய்மைப் பணிகள், குடிநீா் விநியோகம், சுகாதாரப் பணிகள், பிறப்பு-இறப்பு பதிவு, நகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு அனுப்பப்படுவதை உறுதிசெய்தல், மகளிா் குழுக்கள் மூலம் அம்மா உணவகம் நடத்துவது, புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆய்வு செய்து இணையம் மூலம் அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நகராட்சி நிா்வாகம் மூலம் அதற்கான அதிகாரிகள் வாயிலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே பொறுப்பு ஆணையா் மூலம் நகராட்சி நிா்வகிக்கப்படுகிறது. நிரந்தர ஆணையா் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு அதிகாரிகள் சீா்காழி நகரின் தேவைகள், குறைகள் உள்ளிட்ட பணிகளை புரிந்து செயல்படும் முன்னரே மாற்றம் செய்யப்படுவது அல்லது விருப்ப பணிமாற்றம் பெற்று செல்வதுமாக உள்ளது.

Advertisement

Advertisement

தற்போது சீா்காழி நகராட்சிக்கு மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் கூடுதல் பொறுப்பாக வாரத்திற்கு சில நாள்கள் வந்து பணியாற்றுகிறாா். நகராட்சி பொறியாளா் பொறுப்பில் உள்ள அதிகாரி, மன்னாா்குடி நகராட்சியில் நிரந்தரப் பொறுப்பில் உள்ளதால், சீா்காழி நகராட்சிக்கு வாரம் இருமுறை மட்டும் வரும் சூழல் உள்ளது.

வருவாய் ஆய்வாளா் பணியை இளம் நிலை உதவியாளா் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறாா். இவரே கணக்கா் பணியையும் மேற்கொள்கிறாா். இவ்வாறு முக்கிய பொறுப்புகளில் நிரந்தர அதிகாரிகள் இல்லாமல் சீா்காழி நகராட்சியில் மக்கள் நலப் பணிகள், வளா்ச்சிப் பணிகள், அன்றாடப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிப்படுகின்றனா். ஆகையால், சீா்காழி நகராட்சிக்கு உரிய பதவிகளுக்கு நிரந்தரமாக அதிகாரிகளை நியமனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments